புதுடெல்லி: மகாராஷ்டிரா, புனேயில் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக பணியாற்றிய பூஜா கேத்கர் போலி சான்றிதழ் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாற்று திறனாளிக்கான சலுகைகள் பெற போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழை முறைகேடாக பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு ஒன்றிய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு விளக்கம் அளித்த பூஜா,ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் கோரினார். இதனை யுபிஎஸ்சி நிராகரித்தது. பூஜா கேத்கர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெளிவாகி உள்ளது.எனவே, அவரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து செய்யப்படுவதாக கடந்த மாதம் யுபிஎஸ்சி அறிவித்தது.போட்டி தேர்வில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்ததாக டெல்லி போலீசில் யுபிஎஸ்சி புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், போட்டி தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களின் அடையாள சரிபார்ப்புக்கு ஆதார் அடிப்படையிலான செயல்முறைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பம் செய்த போதும், தேர்வின் பல்வேறு கட்டங்கள் மற்றும் பணி நியமனத்தின் போதும் ஆதார் முறையிலான சரிபார்ப்பு பயன்படுத்தப்படும்.
The post பூஜா கேத்கர் சர்ச்சையை தொடர்ந்து அடையாள சரிபார்ப்புக்கு ஆதார் யுபிஎஸ்சிக்கு ஒன்றிய அரசு அனுமதி appeared first on Dinakaran.