×

ஐதராபாத் துர்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை தெலங்கானா முதல்வரின் சகோதரர் வீட்டை இடிக்க நோட்டீஸ்: ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் இருக்காது, முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பல அடுக்குமாடி கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில் நடிகர் நாகார்ஜுனாவின் திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. இந்நிலையில் துர்கம் செருவு ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தெலங்கானா அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதில் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரர் திருப்பதி ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட பல முக்கிய கட்டிடங்களும் ஏரியை சுற்றி ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளதால் இந்த கட்டிடங்களையும் இடிக்க தெலங்கானா அரசு நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் மாதப்பூர் அமர் கூட்டுறவுச் சொசைட்டி கீழ் துர்கம் செருவு ஏரியின் இடத்திற்கு உட்பட்ட இந்த கட்டமைப்புகள் 30 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ரங்காரெட்டி கலெக்டர், செரிலிங்கம்பள்ளி துணை கலெக்டர் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், ஏரியை ஒட்டியுள்ள நெக்டர்ஸ் காலனி, டாக்டர்கள் காலனி, கவுரி ஹில்ஸ், அமர் சொசைட்டி ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கும் இதேபோல் நேற்று நோட்டீஸ் வழங்கினர்.

அதில் ஆக்கிரமித்துள்ள கட்டமைப்புகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தானாக முன்வந்து இடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீறினால் அதிகாரிகள் தாங்களாகவே இடிக்கும் பணியை மேற்கொள்ள நேரிடும். இதுதவிர நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட குடியிருப்போர் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், பொதுமக்களின் நிலத்தை மீட்பதற்கும், ஏரியை மேலும் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக அரசின் நடவடிக்கை அனைவர் மீதும் இருக்கும் என்றும், வருங்கால தலைமுறைக்கு இயற்கைக்கு மாறாக செயல்பட்டால் நம்மை இயற்கை பழிவாங்கும். இதற்கு உதாரணம் உத்தரகாண்ட், கேரளாவில் வயநாடு சம்பவம். நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் இருக்காது என்றார்.

The post ஐதராபாத் துர்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை தெலங்கானா முதல்வரின் சகோதரர் வீட்டை இடிக்க நோட்டீஸ்: ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் இருக்காது, முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Durgam lake ,Telangana ,CM ,Chief Minister ,Revanth Reddy ,Tirumala ,Nagarjuna ,Telangana government ,Durgam Cheruvu Lake ,
× RELATED சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக...