×

ஒரே நாளில் 101 கோயில்களில் குடமுழுக்கு; ஓட்டுமொத்த தமிழர்களின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

தண்டையார்பேட்டை: சென்னை ஓட்டேரி சேமாத்தம்மன் கோயிலில் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார். இதன்பின்னர் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தையால்பேட்டை அங்காளபரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சிறப்பித்தார். இதன்பின்னர் அமைச்சர் கூறியதாவது; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சீர்மிகு நல்லாட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 101 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. நாளையதினம் 26 கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கையும் சேர்த்து இதுவரை 2,226 கோயில்களில் குடமுழுக்கு நிறைவு பெற இருக்கின்றது.

புரட்டாசி மாத வைணவ கோயில்களுக்கான ஆன்மிக பயணம் வருகிற செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்து தொடங்கப்பட உள்ளது. 1000 மூத்த குடிமக்கள் பங்கேற்கும் இந்த திட்டத்திற்காக அரசு 25 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது. அன்னைத் தமிழில் குடமுழுக்கு நடத்திட வேண்டும் என்பதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் குறிக்கோள். நேற்றைய தினம் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இன்றைய தினம் அந்த கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

தமிழிலேயே குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை எங்கிருந்து வந்தாலும் அதற்கு தடை இல்லை. எனவே வரும் காலங்களில் அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வானதி சீனிவாசன் தப்பித்தேன், பிழைத்தேன் என்று மாவட்டத்திலே தேர்வு செய்யப்பட்டவர். கோவை மண்டலத்தில் இருக்கின்ற தொழிலதிபர்கள் திமுகவை ஆதரிக்கவில்லை என்றால் இவர்கள் கட்சியின் வேட்பாளர் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி மண்ணை கவ்வி இருப்பார் – ஆதரவு இருந்திருந்தால் நாடாளுமன்ற உறுப்பினராகியிருப்பார்.

கோவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தில், தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அவர்கள் எல்லாம் திராவிட மாடல் ஆட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் தலைவராகவும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, மாநகராட்சி மன்ற உறுப்பினர் பரிமளம், திமுக பகுதி செயலாளர் ராஜசேகர், வட்ட செயலாளர் பரத், திருக்கோயில் செயல் அலுவலர் முத்துராஜ் கலந்துகொண்டனர்.

 

The post ஒரே நாளில் 101 கோயில்களில் குடமுழுக்கு; ஓட்டுமொத்த தமிழர்களின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Minister ,PK Shekharbabu ,Thandaiyarpet ,Hindu ,Affairs ,Chennai ,Otteri Seemathamman ,Temple ,Muthaialpet ,Port Assembly Constituency ,Kudamuzkuku ,Angalaparameshwari temple ,CM ,Stalin ,
× RELATED கல்வி, தொழில் வளர்ச்சிக்கு...