×

ஆண்டு பெருவிழாவையொட்டி விண்ணை முட்டிய ‘மரியே வாழ்க’ கோஷம் வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்: விண்ணை முட்டிய ‘மரியே வாழ்க கோஷத்துடன்’ வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் அன்னையின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் ஆண்டு பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு பேராலய ஆண்டு விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் மாலை 5.45 மணிக்கு கொடியை புனிதம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து திருத்தல கலையரங்கில் மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்பட்டது.

பின்னர் பேராலய முகப்பில் இருந்து அன்னையின் உருவம் வரையப்பட்ட கொடி ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயம் வந்தடைந்தது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள், ‘ மரியே வாழ்க’…. ஆவே மரியா ’ என்று எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. மாலை 6.45க்கு புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றப்பட்டது. அப்போது கண்கவரும் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டு, வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.

தொடர்ந்து பேராலயம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலித்தது. இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ஆகாஷ், வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ், பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (30ம்தேதி) முதல் செப்டம்பர் 7ம்தேதி வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கனி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேர்பவனி வரும் 7ம் தேதி இரவு நடைபெறுகிறது.

The post ஆண்டு பெருவிழாவையொட்டி விண்ணை முட்டிய ‘மரியே வாழ்க’ கோஷம் வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Marye Hajeu ,Velankanni Temple ,Nagapattinam ,Velankanni Cathedral ,Arogya Anai Paralaya ,Velangkanni, Nagapattinam ,Maryee ,Flag ,Velangkanni Paralaya ,
× RELATED தூய வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி