×

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை

திருப்போரூர்: முட்டுக்காடு முகத்துவாரத்தில் அதிகளவில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் சுற்றுலாத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு முகத்துவாரம் உள்ளது. மரக்காணத்தில் இருந்து விஜயவாடா வரை செல்லும் பக்கிங்காம் கால்வாயும், வங்காள விரிகுடா கடலும் இந்த இடத்தில் சந்திப்பதால் ஆண்டு முழுவதும் நீர்நிறைந்து காணப்படும். இங்கு, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் படகு குழாம் நடத்தப்பட்டு அவற்றில் பைபர் படகுகள், மிதி படகுகள், ஸ்கூட்டர் படகுகள் போன்றவை இயக்கப்படுகின்றன.

பக்கிங்காம் கால்வாய் செல்லும் பெருங்குடி, சோழிங்கநல்லூர், அக்கரை, காரப்பாக்கம் போன்ற பகுதிகளில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த ஆகாயத்தாமரை செடிகள் நீரோட்டத்தின் காரணமாக அடித்து வரப்பட்டு, முட்டுக்காடு முகத்துவாரத்தில் சேர்ந்து விடுகின்றன. இதனால், படகுகள் இயக்குவதில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.

மேலும், படகுகளை வேகமாக இயக்கும்போது தண்ணீரில் கொத்து கொத்தாக ஆகாயத்தாமரை செடிகள் வந்து விழுந்து படகுகளின் வேகத்தை தடுப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலாத்துறை சார்பில் படகுகளை இயக்கும் படகோட்டிகள் இந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் படகுகளை இயக்குவது சுலபமாக இருப்பதாகவும், விபத்துகள் தடுக்கப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

The post முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Muttukadu estuary ,Tiruporur ,East Coast Road ,Buckingham Canal ,Marakkam ,Vijayawada ,Bay of Bengal sea ,
× RELATED திருப்போரூர் அருகே சோகம் கால்வாயில் விழுந்த ஓட்டுநர் பரிதாப பலி