×

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு: முதலீட்டாளர்கள் சந்திப்பில் இன்று உரையாற்றுகிறார்

சான்பிரான்சிஸ்கோ: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய துணை தூதர்தர் ரெட்டி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் சென்றடைந்தார்.

இந்த பயணத்தின்போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களை சந்திக்கிறார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. நேற்று சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணை தூதர் தர் ரெட்டி, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் நெப்போலியன், அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கும் அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். முதல்வரை வரவேற்கும் வகையில் அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள் குழுவினர், தமிழின் பெருமைகளை சிறப்பிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி நடனமாடினர். அமெரிக்கா சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ‘தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவை ஈட்ட, வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவுக்கு வந்திருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

‘செம்மொழியான தமிழ்மொழியே..’ பாடலுக்கு அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆடிய நடனத்தை முதல்வர் ஸ்டாலின் ரசித்தார். பின்னர், அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். முதல்வர் ஸ்டாலினை அமெரிக்காவில் வரவேற்ற புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ‘கழுகு இறங்கி விட்டது’ என்று புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.

பின்னர், வரும் 31ம் தேதி புலம் பெயர் தமிழர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 2ம் தேதி சிகாகோவில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். 7ம் தேதி அமெரிக்காவில் உள்ள அயலக தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். தொடர்ந்து 9ம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சந்திப்புகளை மேற்கொள்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 14ம் தேதி சென்னை திரும்புகிறார்.

The post தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு: முதலீட்டாளர்கள் சந்திப்பில் இன்று உரையாற்றுகிறார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,K. ,United States ,Stalin ,SAN FRANCISCO ,U.S. ,Reddy ,Minister ,T. R. B. The Raja ,America ,
× RELATED அமெரிக்காவில் ஃபோர்டு மோட்டார்ஸ்...