கம்பனது காவியம் மலர்ந்த காவிரி நாட்டில் இராம காதையில் திளைக்காத பாமரன் இருத்தல் அரிது. கவிச்சக்கரவர்த்தியின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டெனவும், கி.பி. 12ஆம் நூற்றாண்டெனவும் இருதரப்பு வாதங்கள் இருந்தபோதும் இராமனது காவியச்சுவை, அவனது பண்பு நலன் ஆகியவை தொன்றுதொட்டே தமிழ் மக்களின் இதயத்தில் ஓடும் ஓர் ஜீவநாடியாகும். அயோத்தி அண்ணலுக்காகத் தமிழகத்தில் எடுக்கப்பட்ட திருக்கோயில்கள் மிகப்பல.
மன்னர்கள் செய்தளித்த செப்புத் திருமேனிகள்தான் எத்தனை எத்தனை! இராமபிரான், மிதிலைச் செல்வி, இளவல் இலக்குவன் இவர்களின் ஒப்பற்ற செப்புத் திருமேனிகள் உள்ள ஊர்களான பருத்தியூர், வடக்குப் பனையூர், தில்லைவிளாகம், வடுவூர் போன்றவை அனைத்தும் பொன்னி வளநாட்டு ஊர்களே என்பதைக் காணும்போது கம்பனது காவிரிநாட்டின் தனிச்சிறப்பு வெளிப்படும்.கடல் கடந்து இந்தோனேஷிய நாட்டில் உள்ள பல திருக்கோயில்களில் இராமா யணக் காட்சிகள் சிற்பங்களாக இடம் பெற்றிருப்பதோடு, இராமாயண நாடகங்கள் அவர்களுடைய கலாச்சாரத்தில் இடம் பெற்றிருப்பதும்கூட தமிழ்நாட்டுடன் அந்நாடு கொண்டிருந்த பழமைத் தொடர்பின் விளைவே என வரலாற்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள பல திருக்கோயில்களில் இராமாயணக் காட்சிகள் சிற்பங்களாகக் கல்லிலே செதுக்கப்பட்டு கவினுறக் காட்சி அளித்தாலும் பொன்னி நதியின் கரையில் உள்ள மூன்று திருக்கோயில்களில் மட்டும் கல்லிலே இராமகாவியம் உன்னத பொலிவுடன் திகழ்கிறது என்பதை மறுக்க முடியாது.தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பெருவழியில் பசுபதி கோவில் என்னும் அழகிய சிற்றூர் உள்ளது. இவ்வூரின் ஓர் பகுதியே ‘‘புள்ளமங்கை’’ என அழைக்கப்படுகிறது.
இலங்கை மனன் முடிதோள் இறஎழில் ஆர்திரு விரலால் விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்திப்புலன்கள் தம்மை வென்றார் புகழ் அவர்வாழ் புள மங்கை
அலங்கல்மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே.- என ஞானசம்பந்தப் பெருமான் போற்றும் அல்லியங்கோதை உடனுறையும் ஆலந்தரித்த நாதர் திருக்கோயில், இன்று ஓர் அழகிய கற்றளியாக (கற்கோயில்) காட்சி அளிக்கிறது. இத்திருக்கோயிலை சோழப்பெருமன்னர்களான முதலாம் ஆதித்தன் – பராந்தகன் காலத்திய கற்கோயில் எனக் கல்வெட்டுச் சான்றுகளோடு ஆய்வாளர்கள் முடிவெடுத்துள்ளனர். கி.பி. 9ஆம் நூற்றாண்டுப் படைப்பான இச்சிவாலயத்தின் கருவறையின் வெளிப்புறச் சுவரின் அதிட்டானப் பகுதியில் உள்ள ஜெகதிப்படையில் அழகிய சிற்பத்தொகுப்பு ஒன்று உள்ளது.
தென்புறம் விநாயகப் பெருமானின் கோஷ்டம் உள்ள பகுதியில் தொடங்கி வடதிசையில் கொற்றவை கோஷ்டம் உள்ள பகுதிவரை இந்நீண்ட சிற்பத் தொகுப்பு உள்ளது. ஒவ்வொரு காட்சியும் 9×6 அங்குலப் பகுதியில் நுண்சிற்பங்களாகப் படைக்கப்பட்டிருப்பதே சிறப்பு அம்சமாகும். இவை களைக் காணும்போது இவை கல்லில்தான் செதுக்கப்பட்டவையா? அல்லது உலோகத்தில் வார்க்கப்பட்டவையா? என ஐயுறும் வண்ணம் உள்ளன.
இராமபிரானின் பிறப்பில் தொடங்கி இராம காவியம் முழுவதும் கவினுறு சிற்பங்களாகக் காட்சி நல்குகின்றன. இராமன் தன் ஆசானிடம் வில் பயிலும் காட்சி உள்ளத்தை விட்டகலா உயரிய சிற்பமாகும். கம்பனது கவிதையில் காணும் கவிச்சுவை அனைத்தும் சிற்பியின் உளியால் மெருகுபட மிளிர்வது கண்கூடு.
பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறும் கோலத் தடக்கைப் பெருமானை
கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை.
சார்ங்கபாணியை அகிலம் அனைத்தும் அறியும். அதே திருக்குடந்தையில் கீழ் கோட்டம் என அழைக்கப்படும் நாகேஸ்வரன் திருக்கோயிலில் (சிவாலயத்தில்) உள்ள இராமாயணச் சிற்பங்கள் பலருக்கும் தெரியாது.‘‘குடந்தை கீழ் கோட்டத்து எம் கூத்தனாரே’’ என அப்பர் அடிகள் போற்றும் இத்திருக்கோயிலின் கருவறை சோழப் பெருமன்னன் முதலாம் ஆதித்த சோழனால் கற்கோயிலாக மாற்றப்பட்டது. கருவறையில் உள்ள சிற்பங்கள் உலக நாடுகளின் கலைஞர்களால் மிகவும் போற்றிப் புகழும் சிறப்பு வாய்ந்தவைகளாகும். இங்கும் புள்ளமங்கைத் திருக்கோயிலில் உள்ளதைப் போலவே 9×6 அங்குல நுண் சிற்பத்தொகுதி கருவறையின் அதிட்டானத்தை அலங்கரிக்கின்றது.
இதில் இராமாயணம் முழுதும் பல்வேறு காட்சிகளாகச் செதுக்கப்பட்டுள்ளன.கலைக்கோட்டு முனிவரின் யாகத்தில் தொடங்கி, வேள்வித் தீயில் பூதம் தோன்றி அமுது அளித்தல், தயரதன் தன் மனைவியர்க்கு அமுதினைப் பகிர்ந்து அளித்தல், குழந்தைப்பேறு, சிறுவன் இராமன், இளைஞன் இராமன், வில் வித்தை பயிலுதல், மணமுடித்தல் போன்ற காட்சிகளில் தொடங்கி இராமாயணம் முழுதும் நுண் சிற்பக் காட்சிகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன. இதைக் காணும்போது கல்லும் இராமனின் கதை சொல்லும் பாங்கைக் கண்கூடாக உணர முடிகிறது.
தஞ்சையை ஆண்ட பெருமைமிகு மன்னர்கள் வரிசையில் சிறப்பிடம் பெறுபவன் தஞ்சை நாயக்கன் இரகுநாதன் ஆவான். இப்பெருந்தகையாளன் இராம பக்தியில் மூழ்கித் திளைத்ததோடு மட்டுமின்றி சிறந்த பண்பாளனாக, ஆழ்ந்த அறிவினனாக வாழ்ந்து காட்டியவன். தினந்தோறும் இராமாயணத்தைப் பண்டிதர்களைக்கொண்டு படிக்கச் செய்து மெய்மறந்து நிற்பானாம். பின்னர் அப்பண்டிதர்களுக்குத் தன் கையாலேயே வெற்றிலை மடித்துக் கொடுத்து உபசரிப்பானாம். அதனால்தான் அறநெறி நின்ற இம்மன்னவனை ‘‘அநவிரத இராமகாதாம்ருத சேவன்’’ என இரகுநாத நாயக்காபுதயம் என்ற தெலுங்கு நூல் அழகுபட விவரிக்கின்றது.
இராமபிரானைப் போற்றுவதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இம்மன்னவன் வாழ்விலும் இராமாயணம் போன்றதோர் நிகழ்ச்சி நிகழ்ந்தது. இராமாயணத்தில் கூனியின் சூழ்ச்சியால் துன்பம் விளைந்தது போன்றே அமைதியான விஜயநகரப் பேரரசிலும் ஜக்கராயன் என்பவனால் கலகம் விளைந்து ராஜகுடும்பத்தினர் பலர் அழிந்தனர். அப்போது உண்மை விசுவாசியான யாசம நாயக்கர் என்னும் அமைச்சர் சிறையில் இருந்த கைக்குழந்தையான இராமனை (இராமராயன்) அழுக்குத் துணிமூட்டையில் கட்டி மாறுவேடம் பூண்டு கடத்தி வந்து வளர்த்து ஆளாக்கி முறைப்படி விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரியணையில் அமர்த்த முயற்சி எடுத்தார்.
இம்முயற்சியில் யாசம நாயக்கர் இரகுநாதனிடம் இராமனை அடைக்கலப்படுத்தி தர்மத்தை நிலைநாட்டக் கோரினார். அறமே தன் மூச்செனக் கொண்ட இரகுநாத நாயக்கன் ஜக்கராயனைப் போரில் வென்று இளைஞன் இராமனுக்குத் தர்மப்படி கிடைக்க வேண்டிய சாம்ராஜ்ய அரியணையைக் கிடைக்கச் செய்தான். வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்தப் போர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகிலுள்ள தோப்பூரில் (தோகூர்) நிகழ்ந்தது. இராமராயனுக்கு அரியாசனம் கிடைக்கச் செய்த இரகுநாத நாயக்கன் அவனுக்குப் பட்டாபிஷேக விழாவைக் கும்பகோணத்தில் நடத்தி அறத்தை நிலைநாட்டினான்.
அப்புனித இடத்தில்தான் பின்பு தான் வணங்கும் அண்ணனை, அறத்தின் மூர்த்தியை, பரம்பொருளை, கல்திருமேனியாக எடுத்து அழகிய ஆலயமும் கட்டுவித்தான். அதுவே இன்று கும்பகோணத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இராமசாமி திருக்கோயிலாகும்.அருள்மிகு இராமசாமி திருக்கோயிலின் முன் மண்டபமான மகா மண்டபமே இராமாயண மண்டபமாகக் காட்சி நல்குகிறது. ஒவ்வொரு தூணும் இராமனின் காவியம் பாடுகின்றன. இரகுநாத நாயக்கனின் உள்ளத்தில் தோன்றிய இராமபிரானின் பல்வேறு கோலநிலைகள், காவியக் காட்சிகள், நெடுமாலின் அவதாரக் கோலங்கள் இப்படிப் பலப்பல நிலைகளைக் கல்லில் பொலியச் செய்தான்.
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
The post கல்லில் இராமகாதை appeared first on Dinakaran.