போச்சம்பள்ளி: அன்றைய காலகட்டங்களில் படை திரட்டுவதற்காக மக்களிடம் போர்க்குணத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்காக போர் நிகழ்ச்சிகள் நிறைந்த பாரதக்கதைகள் கோயில்களில் படிக்கப்பட்டது. அதை மக்களிடம் கேட்கச்செய்யும் வழக்கமும் உருவாக்கப்பட்டது. இதற்காக மானியங்கள் வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளது. ஒரு கட்டத்தில் இந்த போர்க்கதைகள் நீதிக்கதைகளாக மாற்றம் பெற்றது. அதை சொல்லுபவர் உரிய வேடம் தரித்து மக்களிடம் கதை சொல்லியது கவனத்தை ஈர்த்தது. இந்த வகையில் தான் தெருக்கூத்து என்னும் ஒரு அரிய கலை உருவானது. அடுத்து வந்த நாடககலை, சிகரம் தொட்ட வெள்ளித்திரை என்று அனைத்து கலைகளுக்கும் தாய்மடியாக இருந்தது தெருக்கூத்து தான் என்றால் அது மிகையல்ல. ஒரு மனிதனின் வளர்ச்சி மற்றொரு மனிதனை மேம்படுத்தும். அதே நேரத்தில் விதையான ஒரு கலையின் வேர்கள், பெருமரமாய் வளரும் போது அதன் அடித்தளத்தை மறந்து விடும் என்பது இயல்பு. இந்தவகையில் காலத்தின் சுழற்சியால் மறைந்து நிற்கும் கலையாக தெருக்கூத்து என்னும் ஆதிக்கலை மாறி வருகிறது. இதற்கு உயிரூட்டி புதுப்பிக்க கலைஞர்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தவகையில் கிருஷ்ணகிரியை அடுத்த போச்சம்பள்ளி அருகே தெருக்கூத்து கலைக்கு மூத்த கலைஞர்கள் உயிரூட்டியது, மக்களின் கவனத்தை ஈர்த்தது. அழிவின் விழிம்பில் உள்ள தெருக்கூத்து கலையை நிலைநாட்ட போச்சம்பள்ளி அருகில் உள்ள புளியம்பட்டி கிராமத்தில் இரு நாட்கள் கொல்லாபுரியம்மன் நாடக குழுவினர்கள் தெருகூத்து நடத்தி புத்துணர்ச்சி ஏற்படுத்தினர். இதில் மான், மயில், சிலம்பாட்டம், கோலாட்டம், தெருகூத்து நாடகம் என பல வகையாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இது குறித்து தெருக்கூத்து நாடக ஆசிரியர் ஜெயவேல் கூறியதாவது: கதை சொல்லுதல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருகூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம், நாட்டார் கதை சீர்திருத்தகதை அல்லது விழிப்புணர்வு கதை ஒன்றை மையாகமாக வைத்து தெருகூத்து நிகழும். நாட்டுப்புற கலைகளில் குறிப்பிட்டத்தக்க பொழுது போக்கு நிகழ்வாகச் சிறந்து விளங்குவது தெருகூத்தாகும். தெருகூத்தென்பது நாடோடிக்கூத்து வகையை சார்ந்ததாகும். தெருக்கூத்துக்கு நாடக மேடையோ, காட்சி, திரைக்கதையோ இல்லாமல் எளிய முறையில் தெருவிலும், திறந்த வெளிகளிலும் நடைபெறும். இரவு முழுவதும் தெருக்கூத்தை கண் விழித்து பார்த்து மகிழ்ந்து செல்வார். இக்கூத்துப் பெரும்பாலும் காப்பிய இதிகாச புராணகதையை அடிப்படையாக கொண்டு எளிய முறையில் அமைந்திருக்கும். பொதுமக்களுக்கு தெருக்கூத்து ஒரு நல்ல பொழுது போக்காக அமைந்திருப்பதோடு நீதி புகட்டும் வாயிலாகவும் உள்ளது. தெருக்கூத்து என்னும் சொல், நாட்டியம், நாடகம் ஆகிய இரு கலைகளுக்கும் பொதுவானதாகவே வழங்கப்பெற்றுள்ளது. இன்றைக்கும் கூத்து நாடகம் ஆட்டம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கோவில் விழாக்களின் போது வழிபாட்டு சடங்கின் ஒரு பகுதியாகத் தெருகூத்து நிகழ்த்தப்படுகிறது. இந்த கோவில் விழாக்களில் போது வழிபாடு சடங்களின் ஒரு பகுதியாக தெருகூத்து நிகழ்த்தப்படுகிறது.
தினமும் இரவில் பாரத வாத்தியார் பாரத கதையை மக்கள் முன் எடுத்துரைப்பார். பம்பை, தாளம், முதலான இசைச்கருவிகளுடன் பின் பாட்டு பாடுவது இருப்பர் கதையை விவரித்து பின்பாட்டு குழுவினர் ஆமாம் போடுவர். இந்த நிகழ்ச்சி ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து நடைபெறும். தற்போது சினிமா மற்றும் செல்போன் வருகையால் தெருகூத்து நாடகம் அழிந்து வருகிறது. தெருகூத்தை நம்பி பல குடும்பங்கள் உள்ளது. ஆனால் இந்த கலை மெல்ல அழிந்து வருகதை கண்டு கலைஞர்கள் பெரும் கலகத்தில் உள்ளனர். மேலும் அரசு விழாக்கள், அரசு பள்ளிகள், தொண்டு நிறுவனங்களில் நாங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தெருக்கூத்து நடத்தி வருகிறோம். இந்தவகையில் புளியம்பட்டி கிராமத்தில் 2நாட்கள் தெருகூத்து நடத்தினோம். இதற்கு கிராம மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. எனவே தெருகூத்து கலை அழியாமல் காக்க அரசு விழாக்களுக்கு இதை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தெருகூத்து கலைஞர்களோடு கலையையும் காக்க வேண்டும். இவ்வாறு ஜெயவேல் கூறினார்.
The post அழிவின் பிடியில் ஆதிக்கலை; புத்துயிரூட்ட களமிறங்கிய தெருக்கூத்து கலைஞர்கள்: ஆர்வத்துடன் திரண்ட மக்களால் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.