×

பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை, மருத்துவமனைகள் அருகே சிலைகளை வைக்கக் கூடாது : விநாயகர் சதுர்த்தியையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை : சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் மாநகர காவல்துறை சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான அறிவுரைகள், வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன! இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. வருகிற 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின்பேரில், சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும் மற்றும் விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும், வருடந்தோறும் சென்னையில், பெருநகர காவல்துறையின் அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வரும் அமைப்பினருடன் இன்று (28.08.2024) காவல் ஆணையரகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கலந்தாய்வு சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் N.கண்ணன், (தெற்கு), K.S.நநரேந்திரன் நாயர், (வடக்கு), R.சுதாகர், (போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் , நுண்ணறிவுப்பிரிவு காவல் இணை ஆணையாளர், 4 மண்டல காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பாரதிய ஜனதா காட்சி,பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கலந்தாய்வில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது

• விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

• தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.

• சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

•நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.

• பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.

• மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.

• சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.

•நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள்/ விளம்பரத்தட்டிகள் வைக்கக்கூடாது.

•தீ பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

• விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.

•விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை,

இக்கலந்தாய்வு கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், தமிழக அரசின் உத்தரவுப்படியும், விதிகளை பின்பற்றி, போலீசார் அனுமதிக்கும் நாட்களில், விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீரில் கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

The post பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை, மருத்துவமனைகள் அருகே சிலைகளை வைக்கக் கூடாது : விநாயகர் சதுர்த்தியையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,Chennai ,Municipal Police ,Vinayagar Chaturthi ,Vinayakar ,Vinayagar Chaturthiaiotti ,Dinakaran ,
× RELATED விநாயகர் சிலை ஊர்வலத்தில் விதி...