கோவை: கோவை ரயில் நிலையம் அருகே போச்சோ புட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயில் பெட்டியில் ஓட்டல் நடக்கிறது. சில நாட்களுக்கு முன் துவங்கிய இந்த கடையில் பிரியாணி பெல்லி போட்டி நேற்று நடந்தது. இதில் 6 பிளேட் பிரியாணி சாப்பிட்டால் 1 லட்ச ரூபாய், 4 பிளேட் சாப்பிட்டால் 50 ஆயிரம் ரூபாய், 3 பிளேட் சாப்பிட்டால் 25 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு பிளேட் பிரியாணி 600 கிராம் எடையில் இருந்தது. அரை மணி நேரத்தில் போட்டியில் அறிவித்த அளவிற்கு பிரியாணி சாப்பிட்டு முடிக்க வேண்டும். அனுமதி இலவசம் என அறிவித்து டோக்கன் தந்து போட்டியில் பங்கேற்க வைத்தனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் குவிந்தனர். நீண்ட வரிசையில் பிரியாணி சாப்பிட காத்திருந்தனர்.
3 மணி நேரம் மட்டும் போட்டி நடக்கும் என எதிர்பார்த்த நிலையில் பல ஆயிரம் பேர் குவிந்ததால் தொடர்ந்து போட்டியை நடத்த நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போட்டி போட்டு சாப்பிட்டனர். இதில் ஒருவர் மட்டும் 3 பிளேட் பிரியாணி சாப்பிட்டார். ஆனால் அவர் சாப்பிட்டதும் வாந்தி எடுத்துவிட்டார். இன்னொருவர் 2 பிளேட் பிரியாணி சாப்பிட்டு 3வது பிளேட் சாப்பிட்டு கொண்டிருந்தார். ஆனால் 4 பிளேட் சாப்பிட்டால்தான் 3வது பரிசு தொகை கிடைக்கும் என நிர்வாகத்தினர் கூறிவிட்டனர். இதில் அதிருப்தியடைந்த அவர் சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பெண்கள் சிலரும் போட்டி போட்டு பிரியாணி சாப்பிட்டனர்.
இதுகுறித்து போட்டியில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ‘‘பிரியாணி மிகவும் பிடித்த உணவு. இதை சாப்பிட போட்டி வைத்து பரிசு தந்ததால் பணிக்கு விடுப்பு போட்டு வந்துவிட்டோம். பிரியாணியைவிட கோழி இறைச்சி சாப்பிட சற்று தாமதம் ஏற்பட்டது’’ என்றனர். இதற்கிடையே ஓட்டல் முன் கூட்டம் குவிந்தது. வாகனங்கள் ரோட்டோரம் குவிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் 25 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
* மகன் சிகிச்சைக்காக போட்டியில் பங்கேற்ற கால் டாக்சி டிரைவர்
போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடியை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் கணேசமூர்த்தி கூறுகையில், ‘‘போட்டி துவங்கும் முன் ஒரு அறிவிப்பும், துவங்கிய பின்னர் ஒரு அறிவிப்பும் வெளியிட்டனர். இதனால் அதிருப்தி ஏற்பட்டது. என் மகன் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக இந்த போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெறலாம் என வந்தேன். 3 பிளேட் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் அறிவிப்பை மாற்றியதால் நான் எழுந்து சென்றுவிட்டேன்’’ என்றார்.
The post கோவையில் ரயில் பெட்டி உணவகம் நடத்திய போட்டி: 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு; இளைஞர்கள், இளம்பெண்கள் குவிந்தனர்; 25 வாகனங்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.