புதுடெல்லி: நாட்டின் 12 பகுதிகளில் ரூ. 28,602 கோடி செலவில் ஸ்மார்ட் தொழில் நகரங்கள் அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ரூ.6,456 கோடியில் 2 புதிய ரயில்வே வழித்தடம் மற்றும் ஒரு மல்டி டிராக்கிங் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் , சட்டீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 7 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த 3 புதிய ரயில்வே திட்டங்கள், தற்போதுள்ள ரயில்வே வழித்தடத்தை 300 கிமீ அளவுக்கு அதிகரிக்கும்.
இந்த திட்டங்களுடன் 14 புதிய நிலையங்கள் கட்டப்படும். புதிய வழித்தடத் திட்டங்கள் சுமார் 1,300 கிராமங்களுக்கும் சுமார் 11 லட்சம் மக்களுக்கும் இணைப்பை வழங்கும். இதன் மூலம் 19 லட்சம் மக்கள் பயனடைந்து சரக்கு போக்குவரத்தும் மேம்படும்’ என கூறப்பட்டுள்ளது. மேலும், தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28,602 கோடி முதலீட்டில் 12 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், உத்தராகண்டில் உள்ள குர்பியா, பஞ்சாபில் ராஜ்புரா-பாட்டியாலா, மகாராஷ்டிராவின் டிகி, கேரளாவில் பாலக்காடு, உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ், பீகாரில் கயா, தெலங்கானாவில் ஜாஹீராபாத், ஆந்திராவில் ஓர்வகல் மற்றும் கொப்பார்த்தி மற்றும் ராஜஸ்தானில் ஜோத்பூர்-பாலி ஆகிய இடங்களில் இந்த ஸ்மார்ட் தொழில் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, தனியார் பண்பலை வானொலி 3ம் கட்ட ஏலத்தின் கீழ் ரூ.784.87 கோடி மதிப்பில் 234 புதிய நகரங்களில் 730 அலைவரிசைகளுக்கான 3வது தொகுதி மின்னணு ஏலத்தை நடத்தவும், ‘வேளாண் கட்டமைப்பு நிதியம்’ என்ற திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசுத் துறையின் நிதி திட்டத்தை விரிவுபடுத்தவும், வடகிழக்கு பிராந்தியத்தில் 15 ஜிகாவாட் நீர்மின் திட்டங்களுக்கு ரூ.4,136 கோடி நிதி உதவி வழங்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
The post ரூ.28,602 கோடியில் 12 ஸ்மார்ட் தொழில் நகரங்கள்: ஒன்றிய அமைச்சரவை முடிவு appeared first on Dinakaran.