×

இது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்!

நன்றி குங்குமம் தோழி

நடிகை சத்யா மருதாணி

‘‘நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு, லேர்ன் அண்ட் டீச் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘ஜமா’ எனக்கு 5வது படம். ஜமாவையும் சேர்த்து இதுவரை நான் 10 படங்களில் நடித்திருக்கிறேன்’’ என பேச ஆரம்பித்தவர் நடிகை சத்யா மருதாணி.‘‘நீலம் தயாரிப்பில் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கும் ‘தண்டகாரண்யம்’ படத்தில் எனது நடிப்பை பார்த்தே ‘ஜமா’ படத்தில் நடிக்க அழைத்தனர்’’ என்றவர், நடிகர் சேத்தனின் மனைவியாகவும், நடிகை அம்மு அபிராமிக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார்.

‘‘நான் நடிக்க வந்தது ஒரு விபத்து. முகநூலில் நான் பதிவேற்றும் புகைப்படங்கள், சொந்தக்குரலில் நான் பேசும் சின்னச் சின்ன ரீல்ஸ்களை வைத்தே சினிமா வாய்ப்புகள் என் கதவைத் தட்டியது. குறிப்பாக மற்றவர்களின் குரலுக்கு நடிக்காமல், என் சொந்தக்குரலில் வித்தியாசமான கெட்டப்புகளை நானே போட்டு பேசியும்… நடித்தும்… ரீல்ஸ்களாகப் பதிவேற்றுவேன். பெரும்பாலும் கிராமத்து கெட்டப்புகள் பயங்கரமாக எனக்கு செட்டாகும்.

எனக்கு கவிதை எழுதவும் வரும்’’ என்றவர், ‘அம்மாவின் அடுக்களை பல்லி’ எனும் தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டு இருக்கிறேன் என்கிறார். ‘‘அதில் என் கவிதைக்கான புகைப்படங்களுக்கு நானே என்னை வித்தியாசமான வேடங்களுக்கு உட்படுத்தி புகைப்படமாக்கி முகநூல் வெளியிட்டேன். உதாரணத்திற்கு, பெண்ணைப் பற்றிய கவிதை ஒன்றில்,

பெண்ணின் வலியை சொல்லுகிற முகபாவத்திற்கு என்னை மாற்றி புகைப்படமாக்கி பதிவேற்றுவேன். இதைப் பார்த்துதான் நடிக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது’’ என்கிறார் சத்யா மருதாணி.‘‘ஒரு முறை பாட்டி வேடத்தில் எனது புகைப்படம் ஒன்றை பதிவேற்றி இருந்தேன். அந்தப் புகைப்படத்தை பார்த்தே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த ‘மேதகு’ பாகம் 2ல் அவரின் அம்மா வேடத்தில், இலங்கைத் தமிழ் பேசி நடிக்கிற வாய்ப்பு தேடி வந்தது.

முதலில் எனக்கு இது பயங்கர ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதில் என் நடிப்பு பிடித்துப் போகவே இயங்குநர் தன் இரண்டாவது படத்திலும் என்னை நடிக்கக் கேட்டார்’’ எனப் புன்னகைத்தவர், ‘‘சேத்துமான் பட இயக்குநர் தமிழ் என் நடிப்பை பார்த்து அவர் படத்திலும் நடிக்க அழைத்தார்’’ என்கிறார்.‘‘கூத்து எனக்கும் பிடிக்கும். ஆனால் எனக்கு ஊர் கோவை மாவட்டம்.

கோவை வட்டார மொழியை மாற்றி நான் இயல்பாக பேசணும். இதற்காக இயக்குநர் பாரி இளவழகன் ஆடிசன் எடுக்கும் போதே பயிற்சி கொடுத்து ‘இப்படி நடிங்க’ என நடிக்க வைத்தார். ஜமா படத்தில் நடித்த நடிகர்களுக்கு பயிற்சி வழங்கியவர்கள், தியேட்டர் பயிற்சியாளர் சாரதி கிருஷ்ணன் மற்றும் அவரின் மனைவி அந்தோணி ஜானகி. நடிகர் சேத்தன் சாருக்கு பாடவும் வரும் என்பதால், ஐந்தே நாளில் இவர்களிடத்தில் பயிற்சி எடுத்து தெருக்கூத்து நடிப்பை உடனே பிடித்துவிட்டார்.

நடிக்கும்போது கண்ணை உருட்டி உருட்டி அவர் என்னைப் பார்த்தபோது, கொஞ்சம் பயமாகவே இருந்தது’’ எனச் சிரித்தவர், ‘‘இந்தப் படத்தில் யாருமே மிகைப்படுத்தி நடிக்காமல் வாழ்ந்தார்கள் என்றுதான் சொல்லுவேன். படத்தின் இறுதியில் இடம் பெற்ற எட்டு நிமிட சிங்கிள் ஷாட்டில், இயக்குநர் பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி என அனைவருமே சூப்பராக நடித்தார்கள். பாரி இளவழகன் அம்மாவாக கூத்துப்பட்டறை மணிமேகலை அக்கா சிறப்பாக நடித்தார்.ஜமா தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய படம்’’ என்றவர், ‘‘35 நாள் திட்டமிட்டு நடைபெற்ற படப்பிடிப்பில் எனக்கு 22 நாள் நடிப்பு இருந்தது.

திருவண்ணாமலை பக்கம் இயக்குநரின் சொந்த ஊரான பள்ளிகொண்டான்பட்டு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. அவரின் அப்பாவும் இதில் கிராமத்துத் தலைவராக நடித்துள்ளார். அந்தக் கிராமத்தில் 7 முதல் 8 வீதிகளே இருந்தது. அத்தனை வீதிகளிலும் கூத்து நடப்பது போல் படப்பிடிப்பை நடத்தினார்கள். “எங்க கிராமத்துப் பையன் படம் எடுக்கிறான், எங்களுக்கு

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு” என்ற கிராமத்து மக்கள், தெரு
விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு கிராமத்தையே இருட்டாக்கி படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.’’

சத்யாவுக்கு பின்னால் இருக்கும் மருதாணி பற்றி நாம் கேட்டபோது, ‘‘எனக்கு மருதாணி என்றால் ஆசை. சின்ன வயதில் எனக்கு அது கிடைக்காத பொருளாக இருந்ததால், எனது கவிதைகளில் மருதாணி என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினேன். இந்தப் பெயரில் எழுத்தாளர்கள் இல்லை என்பதால், சத்தியவதி என்ற எனது பெயருக்குப் பின்னால் மருதாணி சேர்ந்து சத்யா மருதாணி என வலம் வருகிறேன்’’ என்றவர், மீண்டும் கவிதைப் புத்தகம் ஒன்றையும், சிறுகதைப் புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிடும் முயற்சியில் தான் தீவிரமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

‘‘படங்களில் நடிக்க வருவதற்கு முன்பாக, கோவை நக்கலைட்ஸ் டீமிலும் இரண்டு வருடங்கள் நடிப்பில் இருந்ததாகத் தெரிவித்தவர், ஃப்ரீலான்சராக பல யு டியூப் சேனல்களுக்கும் நடித்துக் கொடுத்தும் வருகிறேன்’’ என்கிறார்.‘‘நான் திருமணமாகி கோவை வந்தபோது, தங்கநகை பரிசோதகராக (Gold appraiser) ஒரு நிறுவனத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றினேன். பிறகு அதை விட்டுவிட்டு நடிப்பில் இறங்கிவிட்டேன்’’ என்றவர், ‘‘தற்போது படங்களில் தொடர்ந்து நடிப்பதால், இதுவே எனக்கு ஃபாஷனாகிவிட்டது. கல்லூரியில் படிக்கும் எனது மகளும் நடிப்பு, மாடலிங் என ஆர்வமாக வலம் வருகி றாள்’’ என்கிறார் சத்யா மருதாணி.

‘‘மனோரம்மா ஆச்சிக்குன்னு நடிப்பில் ஒரு ஸ்டைல் இருக்கு. கோவை சரளா அம்மாவுக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு. நடிகை சரண்யாவுக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு. அதுபோல எனக்குன்னு ஒரு தனி ஸ்டைலை உருவாக்கவே நினைக்கிறேன்’’ என்றவர், நடிப்பிலும் நான் சாதிக்க வேண்டும் என விரல் உயர்த்தி விடைபெற்றார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post இது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்! appeared first on Dinakaran.

Tags : Satya Marudhani ,Learn and Deech ,Jama ,
× RELATED ஜமா