×

வரி வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேயர் வீட்டில் குப்பையை வீசி தெலுங்கு தேசம் கட்சியினர் நூதன போராட்டம்

*ஆந்திர மாநிலம் கடப்பாவில் பரபரப்பு

திருமலை : ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் குப்பைகளை சேகரிக்க மாதத்திற்கு வீடு வீடாக ₹60 வரி விதிக்கப்பட்டது. அதை ரத்து செய்வதாக தேசிய கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்தன. அதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சந்திரபாபு நாயுடு அரசு கடந்த மூன்று மாதங்களாக குப்பைக்கு வரி வசூல் செய்யவில்லை.

ஆனால், கடப்பாவில் குப்பை வரி தொடர்பாக எம்எல்ஏ மாதவிரெட்டிக்கும், மேயர் சுரேஷ்பாபுவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. மேலும் கடப்பா மாநகராட்சியில் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு 50 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு கவுன்சிலர் மட்டுமே உள்ளார்.

இங்கு ஜெகன்மோகன் ஆட்சியில் நூறு ஆட்டோக்களில் வீடு வீடாக குப்பை சேகரிக்கப்பட்டது. இந்த ஆட்டோக்கள் அக்கட்சியின் முக்கிய தலைவர்களின் ஆதரவாளர்களுடையது என கூறப்படுகிறது. குப்பை சேகரிக்கும் ஆட்டோக்களுக்கு பணம் கொடுக்க மாநகராட்சி நிதி கோடிக்கணக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு குப்பை வரி வசூலிப்பது நிறுத்தப்பட்டது, மாநகராட்சிக்கு நிதி சுமையாக இருப்பதாகவும், அதனால் தான் குப்பை சேகரிப்பு நடைபெறாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே 2 நாட்களுக்கு முன்பு குப்பைக்கு வரி வசூலிக்க வேண்டும் என மேயர் சுரேஷ்பாபு உத்தரவிட்டார். வரி கட்டாவிட்டால் குப்பைகளை சேகரிக்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு எம்.எல்.ஏ. மாதவி ரெட்டி, ‘மாநிலம் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் குப்பை வரியை ரத்து செய்வதாக உறுதியளித்துள்ளோம். அதன்படி மாநிலத்தில் எங்கும் வரி வசூல் செய்யப்படவில்லை. ஆனால் கடப்பா மேயர் குப்பை வரி வசூலிக்கச் சொல்வது சரியல்ல. கடப்பா மாநகராட்சி அதிகாரிகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் ஒய்எஸ்ஆர் தலைவர்களின் செல்வாக்கின் கீழ் செயல்படுகின்றனர்’ என்று கண்டனம் தெரிவித்தார்.

மேலும் கடப்பா மாநகராட்சிக்குள் குப்பை அள்ளாவிட்டால், மேயர், கமிஷ்னர் வீட்டின் அருகே குப்பை கொட்ட வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.தொடர்ந்து எம்எல்ஏ மாதவிரெட்டியின் கருத்துக்கு மேயர் சுரேஷ்பாபு கண்டனம் தெரிவித்து, ‘குப்பை வரியை வசூலிக்கக்கூடாது என்று அரசு அதிகாரபூர்வமாக, எந்த உத்தரவும் வழங்கவில்லை, வாய்மொழி அறிவுரைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

குப்பையை அகற்ற கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது. மூன்று மாதங்களாக குப்பை வரியை யாரும் கட்டவில்லை என்பதால் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் வழங்க முடியும்? எம்எல்ஏ பணிவுடன் செயல்பட வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே நேற்று தெலுங்கு தேசம் கட்சியினர் மேயர் சுரேஷ்பாபு வீட்டின் முன்பு குப்பைகளுடன் சென்று வீட்டின் முன்பும், வீட்டின் உள்ளேயும் குப்பைகளை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து மேயர் ஆதரவாளர்கள் சின்னசவுக் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் கடப்பா மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வரி வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேயர் வீட்டில் குப்பையை வீசி தெலுங்கு தேசம் கட்சியினர் நூதன போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Telugu Desam ,Tirumala ,Kadapa, Andhra Pradesh ,Jaganmohan ,Andhra Pradesh ,Janasena ,BJP ,
× RELATED ஆந்திராவில் மதுபானம் விலை அதிரடி...