*மாடுகள் வரத்து குறைந்து விலை அதிகரிப்பு
வேலூர் : வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக இங்கு விற்பனை என்பது ₹70 லட்சம் முதல் ₹2 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும்.
இந்நிலையில் நேற்று நடந்த மாட்டு சந்தையில் ஆயிரத்துக்கும் குறைவான மாடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது மழை பெய்து பல்வேறு இடங்களில் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருவதால் மாடுகளை விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்துள்ளது.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவனம் தட்டுப்பாடு இல்லை. மேலும் விவசாயிகளும் மாடுகளை விற்பனை செய்ய தயங்குகிறார்கள்.
இதனால் மாடுகள் வரத்து சற்று குறைந்துள்ளது. தற்போது கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வந்தது. இவைகளின் விலை சற்று அதிகமாக உள்ளது. இதனால் விற்பனையும் ₹80 லட்சம் வரை நடந்தது. விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் மாடுகள்தான் பெரிய அளவில் விற்பனைக்கு வரவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post பொய்கை மாட்டு சந்தையில் ₹80 லட்சத்துக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.