×
Saravana Stores

தொப்பூர் கணவாயில் விபத்தை கட்டுப்படுத்த லாரி, கார் வேகத்தை காட்டும் டிஸ்பிளே யூனிட்

*விரைவில் அமைக்க நடவடிக்கை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் விபத்தை கட்டுப்படுத்த லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களின் வேகத்தை காட்டும் டிஸ்பிளே யூனிட், தனியாக விரைவில் புதியதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கும், கர்நாடகாவில் இருந்து கேரளா மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கு தர்மபுரி மாவட்ட எல்லையில் தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலை உள்ளது. இருபுறமும் மலைகளால் சூழப்பட்டுள்ள தொப்பூர் கணவாயின் வழியாக தேசிய நெடுஞ்சாலை (என்எச்-44) செல்கிறது. தினந்தோறும் லாரி, கண்டெய்னர்கள் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தொப்பூர் கணவாயை கடந்து செல்கின்றன.

மேலும், ஆந்திரா, வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய முக்கியமான சாலையாகவும் இருந்து வருகிறது. கனரக வாகனங்கள் அதிகளவில் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் கணவாய் பகுதி 6 கி.மீ., தொலைவுக்கு அமைந்துள்ளது. இச்சாலையில் கட்டமேடு முதல் போலீஸ் சோதனைச்சாவடி வரை உள்ள 3 கி.மீ., தூரம் சாலை மிகவும் இறக்கமாகவும், வளைவாகவும் காணப்படுகிறது. இதில், அபாயகரமான எஸ் வடிவ வளைவுச்சாலையும் உள்ளது. மலைப்பாதையில் கனரக வாகனங்களை ஓட்டுவது டிரைவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் இறக்கத்தில் தான் சாலை விபத்து அதிகம் நடக்கிறது. நேற்று ஒரு லாரி, 2 கார்கள் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இருதினங்களுக்கு முன்பு லாரி கவிழ்ந்தது, 2 பேர் காயமடைந்தனர். தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், விபத்து குறைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக சாலை விபத்தில் உயிரிப்போரின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலிருந்து ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது. அதாவது ஆண்டிற்கு 24 பேர் தொப்பூர் கணவாய் பகுதியில் சாலை விபத்தினால் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. ஆனாலும் விபத்து தொடர்ந்து நடக்கிறது.

இகுதுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தொப்பூர் கணவாய் பகுதி இறக்கத்தில் சாலையின் விதிகளின்படி 10 மீட்டர் இடைவெளி விட்டு ஒவ்வொரு கனரக வாகனங்கள் மெதுவாக செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அணிவகுத்து செல்லுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபத்துக்கான காரணங்களை கண்டறிய ஒரு குழு அமைக்க வேண்டும். அதாவது இறக்கத்தில் லாரி கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வருவதற்கான காரணங்கள் என்ன? கவனக்குறைவா என்றும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். மேலும், இறக்கத்தில் வரும்போது சரக்கு ஏற்றிவரும் லாரிகள் விதிகளை கடைபிடித்து 10 மீட்டர் இடைவெளியில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கண்காணிக்க தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து சுங்கச்சாவடி அதிகாரிகள் கூறுகையில், தொப்பூர் கணவாயில் 75 சதவீத விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளது. 25 சதவீத விபத்துக்கள் சாலையின் இறக்கம், வளைவு தன்மையால் விபத்து நடக்கிறது. தொப்பூர் கணவாயில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தெளிவாக தெரியும் வகையில் சோலார் பிளிங்கர் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதை பார்த்தவுடன் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒலி பெருக்கியில் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. வேகத்தை குறைக்க ஸ்பீடு ரேடார் கன் மூலம்(கேமரா) கண்காணித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.

சிசிடிவி கேமரா மூலமும் கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், வாகனத்தை நிறுத்தி பரிசோதித்து மெதுவாக செல்லும்படி எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. ஒலி பெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், தொப்பூர் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் தொப்பூர் கணவாயில் விபத்தை மேலும் கட்டுப்படுத்த புதியதாக ஸ்பீடு ரேடார் கன் என்ற கருவி மூலம் லாரி, கார் உள்ளிட்ட வாகனத்தின் வேகத்தை காட்டும் டிஸ்பிளே யூனிட் விரைவில் அமைக்கப்பட உள்ளது. டிரைவர்கள் எளிதாக பார்க்கும்படி தொப்பூர் கணவாய் சாலையோரத்தில் டிஸ்பிளே அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ஓட்டுநர்கள் வாகனத்தின் வேகத்தை கண்டறிந்து மெதுவாக ஓட்டிச்செல்ல வாய்ப்பு ஏற்படுத்தப்படும். மேலும், சுங்கச்ஙசாவடி கண்ட்ேரால் ரூமில் இருந்து பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

The post தொப்பூர் கணவாயில் விபத்தை கட்டுப்படுத்த லாரி, கார் வேகத்தை காட்டும் டிஸ்பிளே யூனிட் appeared first on Dinakaran.

Tags : Toppur pass ,Dharmapuri ,Dharmapuri district ,Tamil Nadu ,Karnataka ,Dinakaran ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறு? மாமியார் வீட்டு...