×

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு.. செப்.19ம் தேதிக்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்!!

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை செப்.19ம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில், மத்திய சென்னை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி போட்டியிட்டிருந்தார். இவரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது அவர் பேசும்போது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பியை சரமாரியாக விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக, மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார்? என்பதை நீங்கள் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் என பேசினார்.

இந்த பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது தயாநிதிமாறன் எம்.பி., சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை ஆய்வுக்கு எடுத்த எழும்பூர் நீதிமன்றம் இந்த வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக நீதிபதியிடம் பதில் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற செப்.19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு.. செப்.19ம் தேதிக்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Chennai ,Edapadi Palanisami ,PARTHASARATHI ,CENTRAL CHENNAI CONSTITUENCY ,ADAMUKA ALLIANCE ,Secretary General ,Special Court ,Dinakaran ,
× RELATED நயினார் நாகேந்திரன் விரும்பினால்...