×
Saravana Stores

அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே நெடியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கிராமமக்கள் சார்பில் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நெடியம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.சந்திரன் எம்எல்ஏவை அப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் யசோதா மோகன்பாபு, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன் உட்பட கிராமமக்கள் ஒன்றாக சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். தமிழ்நாடு 0 ஆந்திரா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நெடியம் அரசுப் பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினால் இருமாநில மாணவர்களும் பயனடைவார்கள். பள்ளிப்பட்டு வரை பள்ளிக்கு சென்று வர போதிய பேருந்து வசதிகள் இல்லாத நிலையில் பெண்கள் படிக்க வெளியூர் அனுப்பிவைக்க பெற்றோர் அச்சமடைந்து வருகின்றனர். ஆகவே பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

பொதுமக்களின் கோரிக்கை ஏற்று பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து பள்ளியை தரம் உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.சந்திரன் எம்எல்ஏ உறுதியளித்தார். பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.ஜெ.சீனிவாசன் உட்பட திமுகவினர் உடனிருந்தனர்.

The post அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pallipattu ,Nediam Government High School ,Dinakaran ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே மாட்டுத்தொழுவமாக...