×
Saravana Stores

கார்த்திகை- விடுமுறை தினம் எதிரொலி பழநி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

பழநி, ஆக. 27: கார்த்திகை மற்றும் விடுமுறை தினத்தின் காரணமாக பழநி கோயிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வார விடுமுறையுடன், கிருஷ்ண ஜெயந்தி என 3 நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் கார்த்திகை தினத்தின் காரணமாக பழநி கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர்.

அதிக கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்திற்கு பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அன்னதானத்திற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்தினர். நேற்றிரவு தங்கரத புறப்பாட்டின் போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வந்த வாகனங்கள் அருள்ஜோதி வீதியில் குறுக்கும்- நெறுக்குமாக நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விசேஷ நாட்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு அமைப்பின் சார்பில் பெரியநாயகி அம்மன் கோயிலில் ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து வந்திருந்தனர். சிறந்த அலங்காரம் தேர்வு செய்யப்பட்டு, அக்குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

The post கார்த்திகை- விடுமுறை தினம் எதிரொலி பழநி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Karthikai ,Palani temple ,Palani ,Krishna Jayanti ,Karthikai Day ,
× RELATED பழநி கோயில் 2வது ரோப்கார் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை