×

காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி மேகதாது அணை விவகாரத்தில்

வேலூர், ஆக.26: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் அரசியலுக்காக பேசுகிறார் என காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் கேள்வி கூறினார். திருமுருக கிருபானந்த வாரியாரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, வாரியாரின் 119வது ஜெயந்தி விழாவையொட்டி, வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்த வாரியாரின் ஞான திருவளாகத்தில் நேற்று அவரது சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கலெக்டர் சுப்புலட்சுமி, எம்பி கதிர்ஆனந்த், குடியாத்தம் எம்எல்ஏ அமலுவிஜயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா உட்பட பலர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘மேகதாது அணை தொடர்பாக சொல்லி சொல்லி அலுத்துப்போய் விட்டேன். கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் அரசியலுக்காக பேசிக் கொண்டிருக்கிறார். நான் அது தொடர்பாக அதிகம் பேச விரும்பவில்லை. நந்தன் கால்வாய் திட்டம் இந்த வருடம் முழுமை பெறும். அதற்கென தனி கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கீட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆதியிலிருந்து காவிரி பிரச்னையில் நல்ல எண்ணம் இல்லாதவர் தேவகவுடா. அவரைப் பற்றி நன்றாக எனக்கு தெரியும். அவர் பிரதமராக இருந்த போது பேச்சுவார்த்தையின் போது நான் கலந்து கொண்டேன். தமிழகத்தின் மீது நல்ல எண்ணமே இல்லாதவர்’ என்றார்.

முன்னதாக நேற்று காலை வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி கிருபானந்தவாரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டதுடன், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, அறங்காவலர் குழுத்தலைவர் பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி மேகதாது அணை விவகாரத்தில் appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Katpadi ,Meghadatu Dam ,Vellore ,Durai Murugan ,Gadpadi ,Deputy Chief Minister of Karnataka ,Tirumuruga ,Kripananda Wariyar ,Jayanti ,Wariyar ,Meghadatu ,
× RELATED செப்.30-க்குள் வெள்ளத் தடுப்பு பணிகளை முடிக்க ஆணை: அமைச்சர் துரைமுருகன்