×

வேலூர் மத்திய சிறையில் புதிய கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு கைதி தாக்கப்பட்ட விவகாரம்

வேலூர், செப்.14: சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில், கூடுதல் கண்காணிப்பாளர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, வேலூர் சிறையில் புதிய கண்காணிப்பாளர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார்(30), என்பவரை சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தி உள்ளனர். அப்போது ₹4.25 லட்சம் திருடியதாக கூறி தனி அறையில் அடைத்து தாக்கப்பட்டதாக டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து சென்னை சரக சிறைத்துறை டிஐஜி முருகேசன் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியாக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் சென்னை புழல் 2 சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புழல் 2 சிறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பரசுராமன், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளராக பரசுராமன் நேற்று முன்தினம் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு சிறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post வேலூர் மத்திய சிறையில் புதிய கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு கைதி தாக்கப்பட்ட விவகாரம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Central Jail ,Puzhal Jail, Chennai ,Jail ,Sivakumar ,Krishnagiri ,Vellore Jail ,
× RELATED சென்னை ரவுடியிடம் பணம் கேட்டு சிறை...