×
Saravana Stores

அஸ்வின் இடத்தை நிரப்புவதில் வாஷிங்டனுக்குதான் அதிக வாய்ப்பு: தினேஷ்கார்த்திக் சொல்கிறார்

மும்பை: இந்திய அணியின் சீனியர் வீரரான அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 516 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்த மாதத்துடன் அஸ்வின் 38 வயதை எட்டவுள்ள நிலையில், அவருக்கான மாற்று வீரரை பிசிசிஐ தயார் செய்து வருகிறது. துலீப் டிராபியில் வாஷிங்டன் சுந்தர், ஹிருத்திக் ஷோக்கின், சரன்ஷ் ஜெய்ன் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகிய 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த ஆஃப் ஸ்பின்னர் யார் என்ற கேள்விக்கு தினேஷ் கார்த்திக் கூறுகையில், “அடுத்த தலைமுறைக்கான ஆஃப் ஸ்பின்னரை இந்திய அணி நிர்வாகம் நிச்சயம் தேடி வருகிறது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் 3 ஆஃப் ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. புல்கிட் நரங், சரன்ஷ் ஜெய்ன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர்கள் மூவரையும் தான் இந்திய அணி தயார் செய்து வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்திற்கான ரேசில் முன்னிலையில் இருப்பது வாஷிங்டன் சுந்தர் தான். அவருக்கு இதுவரை கிடைத்த குறைந்த வாய்ப்புகளில் என்ன செய்ய முடியுமோ அதனை சிறப்பாக செய்திருக்கிறார். அதனால் முதன்மை வாய்ப்பு வாஷிங்டன் சுந்தருக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த முறை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது காபா டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார். முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டாலும், அடுத்த வாய்ப்பு தொடர்ச்சியாக கிடைக்கவில்லை. தற்போது டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் வாஷிங்டன் சுந்தருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர் ஆஃப் ஸ்பின்னர் என்பதோடு ஜடேஜாவுக்கு இணையான பேட்ஸ்மேனும் ஆவார். இதன் காரணமாகவே வாஷிங்டன் சுந்தர் மற்ற மூன்று பேரையும் விட அதிக வாய்ப்புகளை பெற்று வருவதாக பார்க்கப்படுகிறது.

The post அஸ்வின் இடத்தை நிரப்புவதில் வாஷிங்டனுக்குதான் அதிக வாய்ப்பு: தினேஷ்கார்த்திக் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Washington ,Ashwin ,Dinesh Karthik ,Mumbai ,BCCI ,Dinakaran ,
× RELATED ஜடேஜா – அஷ்வின் சுழலில் திணறல் நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 171