×
Saravana Stores

சிராக், சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து வக்பு வாரிய மசோதாவுக்கு நிதிஷ்குமாரும் எதிர்ப்பு: மோடி அரசுக்கு நெருக்கடி

பாட்னா: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு சிராக் பஸ்வான், சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து நிதிஷ் குமாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பீகாரில் அடுத்தாண்டு தேர்தல் நடப்பதால் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களுடன் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு கடந்த 8ம் தேதி தாக்கல் செய்தது.

இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப ஒன்றிய அரசு பரிந்துரை செய்தது. பாஜ எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்த சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்து வருகிறது. மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் சிராக் பஸ்வான், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஏற்கெனவே கேள்வி எழுப்பினர்.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த மசோதாவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை, மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான், நீர்வளத் துறை அமைச்சர் விஜயகுமார் சவுத்ரி ஆகியோர் சந்தித்து, வக்பு வாரிய சட்டத் திருத்தத்தில் உள்ள சில அம்சங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பீகாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வக்பு சட்டத் திருத்த மசோதாவிற்கு நிதிஷ் குமாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் கூறினர். ஐக்கிய ஜனதா தளம் முடிவால் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

The post சிராக், சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து வக்பு வாரிய மசோதாவுக்கு நிதிஷ்குமாரும் எதிர்ப்பு: மோடி அரசுக்கு நெருக்கடி appeared first on Dinakaran.

Tags : Chirag ,Chandrababu Naidu ,Nitish Kumar ,Modi Govt. ,Patna ,Chirag Paswan ,Bihar ,Modi government ,Dinakaran ,
× RELATED ரிஷிகொண்டா மலையை குடைந்து ஜெகன்...