கோத்தகிரி: கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி பகுதியில் 2 குட்டிகளுடன் கரடி ஒன்று குடிநீர் விநியோகம் செய்யும் மோட்டார் அறைக்குள் பதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடி தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளின் அருகே உலா வருவதும் மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி பகுதியிலும் தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேயிலை தோட்டங்களிலும் கரடி உலா வருவதால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நேற்றும் இரு குட்டிகளுடன் கிராமப் பகுதிக்குள் உலா வந்த கரடி குடிநீர் வினியோகம் செய்யும் மோட்டார் அறைக்குள் (பம்பிங் ஸ்டேஷன்) நுழைந்தது. நீண்ட நேரமாக அறையைவிட்டு வெளியேறாததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். அவர்கள் சத்தம் எழுப்பியதையடுத்து இரு குட்டிகளுடன் கரடி தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. கன்னிகா தேவி காலனி பகுதியில் தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post 2 குட்டிகளுடன் மோட்டார் அறையில் பதுங்கிய கரடி appeared first on Dinakaran.