×

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா விவகாரம்; சிராக், சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து நிதிஷூம் எதிர்ப்பு: பீகாரில் அடுத்தாண்டு தேர்தல் நடப்பதால் திருப்பம்


பாட்னா: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு சிராக் பஸ்வான், சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து நிதிஷ் குமாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பீகாரில் அடுத்தாண்டு தேர்தல் நடப்பதால் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் இங்கு விட்டு சென்ற சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சமீபத்தில் வக்பு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களுடன் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு கடந்த 8ம் தேதி தாக்கல் செய்தது. வக்புவாரியத்தில் முஸ்லிம் பெண்களை சேர்ப்பது, முஸ்லிம் அல்லாதவர்களும் இடம் பெறலாம் என்பதுஉள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப ஒன்றிய அரசு பரிந்துரை செய்தது. பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்த சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்து வருகிறது. மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் சிராக் பஸ்வான், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஏற்கெனவே கேள்வி எழுப்பினர். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த மசோதாவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்தது.

இக்கட்சியின் எம்பி ராஜீவ் ரஞ்சன் இந்த மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திலும் பேசினார். இந்நிலையில், பீகார் முதல்வரும், ஐஜத கட்சித் தலைவரு மான நிதிஷ் குமாரை, மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான், நீர்வளத் துறை அமைச்சர் விஜயகுமார் சவுத்ரி ஆகியோர் சந்தித்து, வக்பு வாரிய சட்டத் திருத்தத்தில் உள்ள சில அம்சங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். பீகாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வக்பு சட்டத் திருத்த மசோதாவிற்கு நிதிஷ் குமாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் கூறினர். ஐக்கிய ஜனதா தளம் முடிவால் ஒன்றிய பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

The post வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா விவகாரம்; சிராக், சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து நிதிஷூம் எதிர்ப்பு: பீகாரில் அடுத்தாண்டு தேர்தல் நடப்பதால் திருப்பம் appeared first on Dinakaran.

Tags : Nidishoom ,Chirak ,Chandrababu Naidu ,Bihar Patna ,Nitish Kumar ,Vakpu Board ,Shirak Baswan ,Bihar ,India ,Pakistan ,Shirak ,Nayudu ,Dinakaran ,
× RELATED மழை வெள்ளத்திற்கு பயந்து தலைநகரை...