*சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் தகவல்
ஊட்டி : குன்னூர் தீயணைப்பு நிலையம் ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் மாற்றிடத்தில் அமைப்பதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என சட்டமன்ற பேரவை உறுதிமொழிக் குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதி மொழிக் குழு குன்னூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை அதன் தலைவர் வேல்முருகன்எம்எல்ஏ தலைமையில். நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
குன்னூர் வெலிங்டன் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி, வருகைப்பதிவேடு, உணவுப் பொருட்களின் இருப்பு,மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளின் தரத்தினை உட்கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், விடுதியினை மிகவும் சிறப்பாக பராமரித்து வரும் விடுதியின் காப்பாளர் சசிகுமார் என்பவரை பாராட்டி, பொன்னாடை அணிவித்து, ஊக்கத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கினர். பின்னர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் குன்னூர் நகராட்சி பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகளை நேரில் கள ஆய்வு செய்து,அந்த பகுதியில் செயல்பட்டு வரும் சில்லறை விற்பனை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, குன்னூர் தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதி மொழிக் குழுவானது, அங்குள்ள தீயணைப்பு வாகனத்தின் தற்போதைய செயல்பாட்டினை ஆய்வு மேற்கொண்டனர்.அரசு லாலி மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள புற நோயாளிகள் பிரிவு, ஊசி போடும் இடம், கர்ப்பிணிகள் பரிசோதனை பகுதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்புகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
மருத்துவமனையின் அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார்கள். மேலும், இக்குழுவானது குன்னூர் இண்ட்கோசர்வ் தேயிலை தொழிற்சாலையினை நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தேயிலைத்தூள் உற்பத்தி, பேக்கிங் உள்ளிட்ட பணிகளை நேரில் பார்வையிட்டார்கள்.
தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத்தலைவர் வேல்முருகன் கூறியதாவது: சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்படுகின்ற நிதி பயன்படுத்தப்படுகிறதா,பணிகள் துவக்காமல் கையிருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொள்ள இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழியின்படி எந்தெந்த பணிகள் நடைபெற்று வருகிறது. எந்தெந்த பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது என்பது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில், கடந்த 2 நாட்களாக ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. இன்று (நேற்று) நடைபெற்ற ஆய்வு பணியில், குன்னூர் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் தீயணைப்பு அலுவலகம் ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் மாற்றிடத்தில் அமைப்பதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசிடமிருந்து அதற்கான ஆணை பெறப்பட்டவுடன் உடனடியாக இப்பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதா எனவும், 2 மயக்கவியல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா எனவும் இக்குழுவானது நேரில் கள ஆய்வு மேற்கொண்டது.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் கீழ் செயல்படும் கூட்டுறவு தேயிலை நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கடனுதவிகள் நவீன மயமாக்கப்படுவது குறித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
ஏறக்குறைய 16 நிறுவனங்களில் 10 நிறுவனங்களுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 நிறுவனங்களில் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, தேயிலை தொழிற்சாலைகள் புdரமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு உறுதிமொழியின்படி ரூ.50.06 கோடி மதிப்பீட்டில் தேயிலை தொழிற்சாலைகள் புணரமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்தோம்.
மேலும், 2022ம் ஆண்டின் உறுதிமொழியின்படி, சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ரூ.3.29 கோடி மதிப்பில், குன்னூர் இண்ட்கோ சர்வ் நிறுவனத்தில் பேக்கேஜ் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதா, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதா என நேரில் கள ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் 2 உறுதி மொழிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு அலுவலகம், அரசு லாலி மருத்துவமனையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த ஆய்வுக்குழுவானது அரசுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் சட்டப்பேரவையால் அமைக்கப்பட்ட இந்த குழு சிறப்பாக தனது பணியினை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக வழங்கப்பட்ட 15 ஆயிரம் உறுதி மொழிகளில் எங்களுடைய குழு ஏறக்குறைய 11 ஆயிரம் உறுதிமொழிகள் குறித்து நேரில் கள ஆய்வு மேற்கொண்டு, கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த ஆய்வு பணி நிறைவு பெற்றது, என்றார்.
இந்த ஆய்வின்போது, கருணாநிதி (இணைச் செயலாளர்),ரவி (துணைச் செயலாளர்),பியூலஜா (சார்புச் செயலாளர்),இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) நாகபுஷ்பராணி,துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி,குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்கண்ணன், இண்ட்கோசர்வ் பொது மேலாளர் அருள்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.
The post குன்னூரில் ரூ.5.33 கோடியில் தீயணைப்பு நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க அரசுக்கு கருத்துரு appeared first on Dinakaran.