வத்திராயிருப்பு, ஆக.24: மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால், பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 47 அடி உயர பிளவக்கல் பெரியாறு அணை உள்ளது. மாவட்டத்திலுள்ள பெரிய அணையான இந்த அணைக்கு மழைக்காலங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து நீர்வரத்து இருக்கும்.
இந்த அணை மூலம் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு, 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் 21 அடியில் இருந்து 25 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 4 அடி உயர்ந்துள்ளது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post மேற்குத்தொடர்ச்சி மலையில் மழையால் பிளவக்கல் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.