திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் மணல் லாரி மோதி பெண் பரிதாபமாக பலியானார். இதனால் பலியான பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் அடுத்த கைவண்டூரில் அரசு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பாச்சூர் கோட்டை காலனி பகுதியை சேர்ந்த கர்ணன் மனைவி வள்ளியம்மாள்(55) என்பவர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது கைவண்டூர் கிராமத்திலிருந்து ஒரு லாரி திருப்பாச்சூர் வழியாக மண் எடுக்க வந்த போது வள்ளியம்மாள் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதனால் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து கிராம மக்கள் திருவள்ளூர் – கடம்பத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து ஏற்படுத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதனால் திருப்பாச்சூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
The post திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் மணல் லாரி மோதி பெண் பலி: உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.