×

ஷட்டர் பூட்டுகளை எப்படி உடைப்பது என யூடியூப் பார்த்து கடைகளில் கைவரிசை: பலே கொள்ளையன் கைது

வேளச்சேரி: ஷட்டர் பூட்டுகளை எப்படி உடைப்பது என யூடியூப் மூலம் பார்த்து தெரிந்து, பல்வேறு கடைகளில் கைவரிசை காட்டி வந்த பலே கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். பள்ளிக்கரணையில் பூட்டிய கடைகளை நோட்டமிட்டு, ஷட்டர் பூட்டை உடைத்து, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போவதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான உருவங்களுடன், பழைய குற்றவாளிகளின் உருவங்களை ஒப்பிட்டு பார்த்தனர். அதில் ஒரு உருவம் பழைய குற்றவாளியான ஆவடி, காமராஜ் நகர், நந்தவன மேட்டூரை சேர்ந்த மன்மதன் (எ) மதன் (27) என்பவருடன் ஒத்துப்போனது.

இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆவலூர்பேட்டை, திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த இவர், பள்ளிக்கரணை பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். அப்போது, கடை ஷட்டர் பூட்டுகளை எப்படி உடைத்து திருடுவது என்பது குறித்து யூடியூப் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொண்டு, இரவில் தொடர் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இவர் மீது திருவள்ளூர், திருமுல்லைவாயல், ஆவடி, டேங்க் பேக்டரி, சேத்துப்பட்டு ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, மதன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

The post ஷட்டர் பூட்டுகளை எப்படி உடைப்பது என யூடியூப் பார்த்து கடைகளில் கைவரிசை: பலே கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : YouTube ,Pallikaran ,
× RELATED பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில்...