×

ஒரு நாள் வாடகையில் திருமண உடைகள்!

நன்றி குங்குமம் தோழி

திருமண வரவேற்பின் போது லஹங்கா, கவுன்களை அணிவதுதான் இன்றைய டிரெண்ட். இந்த உடைகள் ஒவ்வொன்றும் பல ஆயிரம் ரூபாய் விலை. மேலும் இந்த உடைகளை திருமண வரவற்புக்கு பிறகு அதை அணிந்து ெகாள்ளமாட்டார்கள். ஒருமுறை மட்டுமே அணியக்கூடிய உடைக்கு ஏன் பெரிய தொகை கொடுக்க வேண்டும் என்று ஆதங்கப்படுபவர்களுக்காகவே வாடகை முறையில் லஹங்கா மற்றும் கவுன் போன்ற உடைகளை வழங்கி வருகிறார் லலிதா பாலு மற்றும் அவரின் மகனான விக்னேஷ். இவர் சென்னையில் லித்தாஸ் ஸ்டுடியோ என்ற பெயரில் இதனை நடத்தி வருகிறார்.

‘‘எங்களுக்கு சொந்த ஊர் சேலம். அம்மா லலிதா, தையல் கலைஞர். ஆரம்பத்தில் அம்மா கல்யாண பிளவுஸ் அதில் எம்பிராய்டரி எல்லாம் செய்து வந்தாங்க. அப்போது திருமணம் மட்டுமில்லாமல் வரவேற்பு போன்ற நிகழ்வுகளுக்கும் புடவையினைதான் அணிந்து வந்தாங்க. ஆனால் இப்போது புடவையை திருமணத்திற்கு மட்டுமே அணிகிறார்கள். மற்ற விசேஷங்களுக்கு லஹங்கா அல்லது கவுன் போன்றவற்றைதான் மணப்பெண்கள் விரும்புறாங்க. காரணம், அன்று அவர்கள்தான் கதாநாயகி என்பதால், பார்க்க அழகாகவும் அதே சமயம் அவர்கள் அணியும் உடைகளும் மிகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பெண்கள் எப்போதும் தங்களை அழகாக காட்டிக் கொள்ளவே விரும்புவார்கள். அதற்காக அவர்கள் வாங்கும் சின்னச் சின்ன பொருட்களையும் மிகவும் கவனமாக பார்த்து வாங்குவார்கள். அதேபோல் துணிகளையும் தனித்துவமாக உடுத்த வேண்டும் என்று விரும்புவார்கள். அதனாலேயே அவர்கள் அணியும் உடைகளில் மிகவும் கிராண்டாக டிசைன் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆரம்பத்தில் அம்மா பிளவுஸ் மட்டுமே தைத்து வந்தார். பிறகு மணப்பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப லஹங்கா மற்றும் கவுன் போன்ற உடைகளையும் தைக்க பழகிக்கொண்டார்’’ என்றவர் வாடகைக்கு கொடுக்கும் துணிகள் பற்றி பேசத் தொடங்கினார்.

‘‘திருமண முகூர்த்த புடவைகள் பெரும்பாலும் பாரம்பரியமாக இருப்பதால், வரவேற்பு போன்ற நிகழ்வுக்கு கிராண்டாக உடையினை அணிகிறார்கள். அந்த உடைகளை அடுத்த முறை உடுத்த முடியாது. வேறு இடங்கள் அல்லது மற்றுமொறு கல்யாணத்திற்கும் அணிய முடியாது. அப்படியிருக்கும் போது ஒருமுறை மட்டுமே அணிந்து அந்த உடையினை அப்படியே பீரோவில் மடித்துதான் வைத்திருப்பார்கள்.

மேலும் இந்த உடையின் விலையும் அதிகம். நடுத்தரப் பெண்கள் அணிய விரும்பினாலும், அவர்களால் அதனை வாங்க முடியாது. அதற்காகவே வாடகைக்கு இந்த துணிகளை கொடுத்தால் சரியாக இருக்கும் எனத் தோன்றியது. மேலும் அம்மா தைக்கும் உடைகள் மட்டுமில்லாமல், மார்க்கெட்டில் வரும் புது துணிகளையும் வாங்கி அதனையும் வாடகைக்கு கொடுக்க திட்டமிட்ட அடுத்த நிமிடமே சேலத்தில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அங்கு பலவித டிசைன்களில் லஹங்கா மற்றும் கவுன்களை வாடகைக்கு கொடுக்க துவங்கினோம்.

மணப்பெண்களும் அவர்களுக்கு பிடித்த உடைகளை இங்கு வந்து தேர்வு செய்ய துவங்கினார்கள். இரண்டாயிரம் முதல் எட்டாயிரம் வரை உடையின் டிசைனிற்கு ஏற்ப வாடகைக்கு கொடுத்தோம். பார்ப்பதற்கு அழகாகவும் தங்களால் வாங்கக்கூடிய விலையில் இருப்பதால், பலர் வர துவங்கினார்கள்.

எங்களின் யு.எஸ்.பியே அம்மாவிற்கு தைக்க தெரியும் என்பதால் ஒருவரின் அளவிற்கு ஏற்ப அதனை வடிவமைத்து தர முடிகிறது. கிராப் டாப், பால் கவுன்கள், வெஸ்டர்ன் உடைகள், மெட்டரினிட்டி கவுன்கள், பாவாடை என அனைத்துவிதமான உடைகளும் எங்களிடம் உள்ளது. நாங்க இந்த உடைகளை பெரிய தொகைக் கொடுத்து வாங்கித்தான் அதனை எல்லோரும் வாங்கக்கூடிய விலையில் வாடகைக்கு தருகிறோம். தற்போது சேலத்தை தொடர்ந்து சென்னையிலும் ஒரு கடையை தொடங்கி இருக்கிறோம்’’ என்றார் விக்னேஷ்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post ஒரு நாள் வாடகையில் திருமண உடைகள்! appeared first on Dinakaran.

Tags : Lahanga ,Dinakaran ,
× RELATED முகப் பருக்களை தடுக்கும் வழிமுறைகள்!