புதுடெல்லி: பிரதமர், முதல்வர், அமைச்சர் ஆகிய முக்கிய பதவியில் இருந்து கொண்டு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தேர்தல் காலங்களில் பிரதமரோ, முதல்வர்களோ அல்லது அமைச்சர்களோ பதவியில் இருந்து கொண்டு பிரசாரம் செய்ய வரக்கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் எதிரானதாகும்.
ஒருவேலை பிரசாரத்தில் ஈடுபடும் கட்டாயம் ஏற்பட்டால், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு மேற்கொள்ளலாம். ஏனெனில் தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருந்தாலும், அரசின் கட்டுக்குள் தான் வருகிறது. எனவே இதுகுறித்த ஒரு உத்தரவை நாடு முழுவதும் ஏற்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பிரசாரங்களை மேற்கொள்பவர்கள் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பி.பி.வரேலா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பிறப்பித்த உத்தரவில், ‘செய்தித்தாள்களில் உங்களது பெயர் வர வேண்டும் என்ற விளம்பர நோக்கத்தோடு இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்துள்ளீர்களா?’ என மனுதாரருக்கு கேள்வியெழுப்பினர். அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மனுதாரர் வைத்துள்ள கோரிக்கையின் சில சாராம்சம் முன்னதாகே தேர்தல் ஆனையத்தின் சட்ட விதிகளின் உள்ளது’ என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்த நிலையில், மனுவை வழக்கறிஞர் எம்.எல்.ரவி வாபஸ் பெற்றுக் கொண்டார்.
The post பிரதமர் உள்ளிட்டோர் பதவியில் இருந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்ய தடை கேட்ட மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.