தூத்துக்குடி,ஆக 23: நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்தவர் பீட்டர் கிறிஸ்டியன். இவரது உறவினர் லிவிங்ஸ்டன். இவர் தனது பெயரில் பாலிசி எடுத்திருந்தார். பாலிசி நடப்பில் இருக்கும் போதே எதிர்பாராத விதமாக லிவிங்ஸ்டன் காலமாகி விட்டார். இதையடுத்து இறந்துபோன லிவிங்ஸ்டனின் சட்டப்படியான வாரிசான பீட்டர் கிறிஸ்டியன் இன்சூரன்ஸ் இறப்பு நிவாரண காப்பீட்டு தொகையை கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் பணத்தை தர மறுத்துள்ளது. இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார். இதனால் அவர் உடனடியாக வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் விசாரித்தனர். மேலும் காப்பீட்டு தொகை ₹20 லட்சம், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு தொகை ₹1லட்சம் என மொத்தம் ₹21 லட்சத்தை இருமாதத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
The post சேவை குறைபாட்டால் பாதிப்பு காப்பீட்டு நிறுவனம் ₹21 லட்சம் வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.