×
Saravana Stores

விநாயகர் சதுர்த்தி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த வேண்டாம்: மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது.
இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். விநாயகர் சதுர்த்தியின் புனிதமான தருணத்தை நெருங்கும் வேளையில், இந்த பண்டிகையை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கொண்டாடுவதற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி. மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் ஒன்றிய மாசுகட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்க வேண்டும்.

செய்யவேண்டியவை
* சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்த வேண்டும்
* சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்த வேண்டும்.
* சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும்.
* அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்க கூடிய அலங்கார துணிகளையே பயன்படுத்தவும்.
* பிரசாத விநியோகத்திற்கு மக்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும்.
* பொறுப்புடன் குப்பையை பிரித்து அப்புறப்படுத்துங்கள்.
* அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
* எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும்.
* அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும்.

செய்யக்கூடாதவை
* பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த வேண்டாம்.
* சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமுறை உபயோகித்து தூக்கி எறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் ரசாயன பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த வேண்டாம்.
* சிலைகளின் மேல்பூச்சுக்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த வேண்டாம்.
* சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமுறை உபயோகித்து தூக்கி எறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த வேண்டாம்.
* வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட ஒருமுறையே உபயோகித்து தூக்கி எறிய கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
* பண்டிகையின் போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட வேண்டாம்.
* அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க வேண்டாம்.
* பிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த வேண்டாம்.
* ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

The post விநாயகர் சதுர்த்தி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த வேண்டாம்: மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,Board ,Chennai ,Tamil Nadu Pollution Control Board ,Vinayagar Chaturthi ,Paris ,Tamil Nadu ,
× RELATED மாற்றுத்திறனாளி உதவி பொறியாளருக்கு...