- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- தண்டாயர்பேட்டை
- உதயநிதி ஸ்டாலின்
- கலைஞர் நூற்றாண்டு விழா கட்டிடம்
- பாரதி மகளிர் கல்லூரி
- பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி
தண்டையார்பேட்டை: நான் முதல்வன் திட்டம் மூலம் 30 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர் என பாரதி மகளிர் கல்லூரியில் ₹25 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை திறந்து வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் ₹25 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர், கல்லூரி வளாகத்திற்குள் சென்று பார்வையிட்டார். விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் நூற்றாண்டு கட்டிடம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறந்து வைத்துள்ளேன். 100 வருடங்களுக்கு முன்பு பெண்கள் அடிமைப்பட்டு கிடந்தனர். அதை பெரியார், அண்ணா, கலைஞர் உடைத்து எரிந்து அவர்களை வெளியேகொண்டு வந்தார்கள். தற்போது பெண்கள் எல்லா துறையிலும் சாதித்து வருகிறார்கள். புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டு 3 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளார்கள். இதுபோல் மாணவர்களுக்காக தமிழ்புதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் மூன்று லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள். ஒரு ஆண்டில் மொத்தம் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இதன் மூலம் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், இந்தியாவிலே உயர் கல்வியில் 50 சதவீதத்திற்கும் மேல் தமிழ்நாட்டில் படித்து வருகிறார்கள். நான் முதல்வன் திட்டம் மூலம் 30 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். இதில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அரசு கல்லூரியில் படித்த மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுள்ளது. பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
மாணவர்கள் படிப்பது மட்டுமில்லாமல் விளையாட்டிலும் கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், ”இந்த கல்லூரியில் தான் தமிழக முதல்வர் புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த கட்டிடம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதுபோல் ஆராய்ச்சி மேல்படிப்பு மாணவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் செயல்படுத்தி வருகிறார்” என்றார். விழாவில், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், முன்னாள் எம்எல்ஏ ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் பரிமளம் ஆசாத், வேளாங்கண்ணி, கல்லூரி முதல்வர் கிலாடிசன், உதயசங்கர், துரைக்கண்ணு, முரளி, ராஜசேகர் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முத்தியால்பேட்டை வெங்கடா தெரு, வால்டாக்ஸ் சாலை ஜக்கா புரம் ஆகிய பகுதிகளில் தயாளு அம்மாள் டிரஸ்ட்களை தொடங்கிவைத்தார்.
The post நான் முதல்வன் திட்டம் மூலம் 30 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.