×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சர்வதேச போலீஸ் உதவியை நாடிய தமிழக காவல்துறை: சம்போ செந்திலுக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சர்வதேச போலீஸ் உதவியை தமிழக காவல்துறை நாடியுள்ளது. ரவுடி சம்போ செந்திலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் போலீசார் ஒவ்வொரு கட்டமாக அலசி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் ரவுடி சம்பவ செந்தில் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடி சம்பவ செந்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார். அவரது தற்போதைய புகைப்படங்கள் கூட காவல்துறையிடம் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு எதிராக சென்னை காவல்துறை ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஏற்கனவே சம்பவ செந்திலுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களிலும் லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதால் சென்னை காவல்துறை இண்டர்போல் சர்வதேச போலீசின் உதவியை நாடியுள்ளது. சென்னை காவல்துறை பரிந்துரையின் பேரில் ஒன்றிய உள்துறை மூலமாக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் சம்பவ செந்திலின் நெருங்கிய கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அவருக்கு எதிராகவும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்ட ஒரு நபர் எந்த நாட்டில் இருந்தாலும் அவரைக் கண்டுபிடித்து சரணடைய வைத்து, அந்த நாட்டு போலீசிடம் ஒப்படைக்கும் பணியை இன்டர்போல் போலீஸ் மேற்கொள்ளும்.

* அடையாறு பகுதியில் சோதனை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பவ செந்திலுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் மொட்டை கிருஷ்ணனை பிடித்தால் சம்பவ செந்தில் இருக்கும் இடம் தெரியும் என்பதால் போலீசார் மொட்டை கிருஷ்ணா குறித்த தகவல்களை அலசி ஆராய்ந்து வருகின்றனர். மொட்டை கிருஷ்ணனின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது அவர் கடந்த மே மாதம், முதல் வாரத்தில் சென்னை அடையாறு பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக ஓட்டல் பொது மேலாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அடையாறு பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளுக்கும் மொட்டை கிருஷ்ணன் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் அடையாறு பகுதியில் மொட்டை கிருஷ்ணன் சென்று வந்ததாக கூறப்படும் சில வீடுகள், சர்வீஸ் அபார்ட்மெண்ட்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சர்வதேச போலீஸ் உதவியை நாடிய தமிழக காவல்துறை: சம்போ செந்திலுக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Police ,Armstrong ,Sambo Senthil ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED போதைப் பொருள் பறிமுதல்; ஆளுநர் பொய்...