×

பாஜ கூட்டணி இல்லாவிட்டால் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருக்கும்: அண்ணாமலை சாடல்

சென்னை: பாஜ சார்பில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் மற்றும் மாநில பயிலரங்கம் காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மூத்த நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.பின்னர், நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

அதிமுகவில் இருக்கும் ஜெயக்குமார் வாய்க்கு வந்ததெல்லாம் சொல்வார், அவருக்கு அரசியல் நாகரிகம் இல்லை, பெருந்தன்மை இல்லை, அதற்கெல்லாம் மதிப்பளித்து பதில் சொன்னால் தவறாக போய்விடும். 2024 தேர்தலில் அதிமுகவின் நிலையை அவர்கள் பார்க்க வேண்டும், பல இடங்களில் நான்காவது இடத்திற்கு சென்றது மட்டுமல்லாமல் பல இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு பாஜவில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 2021ல் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தது அதிமுகவால் தான் என்று கூறுகிறார்கள்.

கூட்டணியில் இருக்கும்போது அதிமுகவுக்கு பல எம்எல்ஏக்கள் கிடைத்ததற்கு பாஜ உழைத்திருக்கும், பாஜ உறுப்பினர்களுக்கு அதிமுக தொண்டர்கள் உழைத்திருப்பார்கள் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பதுபோல அதிமுக பல எம்எல்ஏக்கள் உருவாவதற்கு பாஜ தொண்டர்கள் உழைத்திருக்கிறார்கள், அப்படி இல்லை என்றால் அதிமுகவிற்கு இவ்வளவு உறுப்பினர்கள் கிடைத்து இருக்க மாட்டார்கள். எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்திருப்பார்கள். அதனுடைய வெளிப்பாடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் தெளிவாக தெரிந்திருக்கிறது.

அரசியல் தெரிந்த யாருக்குமே இது நன்றாக தெரியும். அதிமுக பெற்றுள்ள எம்எல்ஏக்கள், எத்தனை எம்எல்ஏக்களை பாஜ தொண்டர்கள் கொடுத்தார்கள் என்பது தெரியும். அதிமுக தன்னுடைய நிலைமையை பார்த்து அவர்களே பரிதாபப்பட்டுக் கொள்ள வேண்டும். அவர்கள் மேலே வருவதைப் பற்றி யோசிக்க வேண்டுமே தவிர காலையிலிருந்து எழுந்தவுடன் பாஜ பாஜ என்று சொல்வது என்பதுதான் அவர்களுடைய வேலையாக இருக்கிறது.நிச்சயமாக 2026ல் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம். அதிமுகவின் சக்தி உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும், வாக்கு சதவீதம் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. அதனுடைய இயலாமையை, ஆற்றாமையை, பொறாமையை இதுபோன்ற பத்திரிகையாளர் சந்திப்புபோது அண்ணன் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் காலையிலிருந்து இரவு வரை இதையே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

The post பாஜ கூட்டணி இல்லாவிட்டால் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருக்கும்: அண்ணாமலை சாடல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP alliance ,Annamalai Chatal ,CHENNAI ,BJP ,Sewilimedu ,Kanchipuram ,president ,Annamalai ,Tamilisai Soundararajan ,Union ,minister ,
× RELATED கண்ணாடி இழை பாலம் திட்டம்; எடப்பாடிக்கு அமைச்சர் பதிலடி