×
Saravana Stores

அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது: தலைமறைவாக உள்ளவருக்கு வலை

சென்னை: ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் ஆவடி வெள்ளானூர் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (33). இவர் 5.7.2024ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் 2021ம் ஆண்டு சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தீயணைப்பு நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தேன். அப்போது ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த அருள்ஸ்டீபன் (34) என்பவர் ஐ.சி.எப் தொழிற்சாலை ஒப்பந்த ஊழியர் என்று அறிமுகமாகி நண்பராக பழகி வந்தார். அருள்ஸ்டீபன் ஒன்றிய, மாநில அரசு வேலைக்கு ஆட்களை சேர்த்து விட்டதாகவும், சேலத்தைச் சேர்ந்த நண்பர் விஸ்வநாதன் (33) என்பவர் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் என்னிடம் கூறினார்.

எனவே, ஐடிஐ படித்துள்ள நான் எனக்கேற்ற வேலையை வாங்கி தரும்படி கேட்டேன். அதற்கு. 17.5.2021ல் அஞ்சல் துறையில் பணியாளர்கள் கார் டிரைவர் வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்கான அரசின் அறிவிப்பினை என்னிடம் கொடுத்தார். எனது விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் அனுப்பியுள்ளார். 4 மாதங்கள் கழித்து அருள் ஸ்டீபன் மேற்படி வேலைக்கு ரூ.5 லட்சம் செலவாகும், அதை உடனடியாக தயார் செய்யுமாறு என்னிடம் கூறினார். மேலும், 25.11.2021 தேதிக்குள் மேற்படி பணியில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற போலியான பணிநியமன ஆணையை காண்பித்து என்னை நம்ப வைத்தார். நான் 1.10.2021ல் ரூ.1,50,000த்தை அருள்ஸ்டீபன் பணிபுரிந்த இடத்தில் வைத்து கொடுத்தேன்.

அதேபோல் எனது அம்மா கலாவதி, தந்தை கிருஷ்ணன் ஆகியோரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.3,50,000 பணத்தை அருள்ஸ்டீபன் வங்கி கணக்கிற்கு 22.11.2021ம் தேதியில் அனுப்பினேன். அதற்கு ஒரு பணிநியமன ஆணையை அருள்ஸ்டீபன் என்னிடம் கொடுத்தார். அதில் கோயம்புத்தூர் போஸ்டல்சர்கில் அலுவலகத்தில் 5.1.2022ம் தேதி அனைத்து சான்றிதழ்களுடன் பணியில் சேருமாறு இருந்தது.

இதனை தொடர்ந்து, கோயம்புத்தூர் போஸ்டல்சர்கில் அலுவலகத்தில் விசாரித்ததில் மேற்படி பணி நியமன ஆணை போலியானது என தெரியவந்தது. இதுகுறித்து அருள்ஸ்டீபனிடம் கேட்டதற்கு வேலை வாங்கி தருகிறேன் என்று காலம் தாழ்த்தி வந்தார். 27.3.2022 அருள்ஸ்டீபன் வங்கி கணக்கிலிருந்து ரூ.3,50,000க்கு உண்டான காசோலையில் கையொப்பம் போட்டு கொடுத்தார். மேற்படி காசோலை பணமில்லாமல் திரும்பி வந்தது. பின்னர் அருள்ஸ்டீபன் ஐயப்பன்தாங்கலில் இருந்து வீட்டை காலி செய்து சொந்த ஊரான சேலம் சென்றுவிட்டார் என அந்த புகாரில் தெரிவித்திருந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் போரூர், வானகரம் சாய் கார்டனில் தலைமறைவாக இருந்த அருள்ஸ்டீபன் என்பவரை நேற்று கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் குற்றவாளியான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

The post அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது: தலைமறைவாக உள்ளவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sivakumar ,Vinayakar Koil Street, Avadi Vellanur ,Avadi Police ,Chennai ICF ,
× RELATED டிஐஜி மீது துறைரீதியான நடவடிக்கை...