சென்னை: இந்த நிதியாண்டில் 75 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இதற்கு முதல்வர் உத்தரவாதம் அளித்திருக்கிறார் என்றும் அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார்.
சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25ம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்த புதிய மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள், பாட புத்தகங்கள், வரைபட கருவிகள் மற்றும் கட்டணமில்லா பேருந்து அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், பாட புத்தகங்களை வழங்கி, தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட குறும்படத்தையும் வெளியிட்டார். மேலும், ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் மேம்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தையும் திறந்து வைத்தார்.
அப்போது அமைச்சர் சி.வி.கணேசன், மாணவ, மாணவிகளிடையே பேசுகையில், ‘அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளது. அதன்படி, கடந்த கல்வியாண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்த 2700 பேரில் 2310 நபர்களுக்கு நாட்டின் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது,’ என்றார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், `தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். அதன்படி வந்ததுதான் நான் முதல்வன் திட்டம். மார்ச் 1ம்தேதி இத்திட்டத்தின் இணையதள பக்கம் துவக்கப்பட்டது. அனைத்து விவரங்களும் அதில் சிறப்பாக குறிப்பிடபட்டிருக்கிறது. இந்த, 2024-25ம் நிதியாண்டில் 75 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் உத்தரவாதம் அளித்திருக்கிறார்,’ என்றார். நிகழ்ச்சியில் துறை செயலாளர் வீரராகவராவ், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி, அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post முதல்வர் உத்தரவாதம் அளித்தபடி இந்த நிதியாண்டில் 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல் appeared first on Dinakaran.