×
Saravana Stores

ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து பாரிமுனை கச்சாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.16 கோடி நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை

சென்னை: ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து, பாரிமுனை கச்சாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.16 கோடி நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 4,400 சதுர அடி நிலத்தை, ராமசாமி முதலியார் என்பவர், 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து இருந்தார். இந்த இடத்தில் ராமசாமி, லஷ்மி அம்மாள், பாலகிருஷ்ணன், பாஸ்கரன், சந்தானம், ஆகியோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், குத்தகை காலம் முடிந்தும், அந்த இடத்தை அறநிலையத்துறை வசம் ஒப்படைக்காமல், தொடர்ந்து இவர்கள் அனுபவித்து வந்தனர். கடைகளையும் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். மேலும், அனுமதியின்றி ஹைதர் அலி, அகமது கபீர், ரஷீத் கான், சித்திக், சுல்தான் ஆகியோருக்கு இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து, கோயில் செயல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டு, இடத்தை காலி செய்யும்படி அங்கு வசித்து வந்தவர்களிடம் கூறினார். மேலும், அந்த இடத்தில் செயல்பட்டு வந்த எம்.ஆர்.என்டர்பிரைசஸ், மஞ்சுளா எலக்ட்ரிகல்ஸ், ரேபிட் மேரி டைம்ஸ், ஷா பேரிங் ஆகிய கம்பெனிகளுக்கு கால அவகாசம் கொடுத்தார். ஆனால், அவர்கள் காலி செய்ய மறுத்து வந்தனர்.இந்நிலையில் சென்னை மண்டலம் 1 இணை ஆணையர் முல்லை நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சென்னை உதவி ஆணையர் (கூ.பொ) நித்யா முன்னிலையில், காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

மீட்கப்பட்ட சொத்தின் சந்தை மதிப்பு ரூ.16 கோடியாகும். தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) திருவேங்கடம், கோயில் அறங்காவலர்கள்,கோயில் செயல் அலுவலர் கே.எஸ்.நற்சோணை, சரக ஆய்வர் சம்பத், சிறப்பு பணி அலுவலர்கள், மற்றும் நில அளவையர்கள் உடனிருந்தனர்.

The post ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து பாரிமுனை கச்சாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.16 கோடி நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Parimuna Kachaleswarar temple ,Charity department ,CHENNAI ,Charities Department ,Kachaleswarar Temple ,Barimuna Prathakkaran Street ,
× RELATED திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.6792 கோடி...