×

2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் 600 பேர் பங்கேற்பு நள்ளிரவிலேயே வந்து காத்திருந்த இளைஞர்கள் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நடந்த

வேலூர், ஆக.21: வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் முதல் நாளான நேற்று 600 பேர் கலந்து கொண்ட நிலையில், வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் நள்ளிரவே அங்கு வந்து காத்திருந்தனர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,552 இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறைக்காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 295 மையங்களில் நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 பேர் தேர்வு எழுதினர். 66,908 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் 98,226 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.

இந்த நிலையில் உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்பேரில், நேற்று மாநிலம் முழுவதும் 8 இடங்களில் தேர்வு நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த உடற்தகுதி தேர்வில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1,202 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டு முதல் நாளான நேற்று அழைப்பு விடுக்கப்பட்ட 600 பேரில், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வந்தவாசி, வேட்டவலம், செங்கம், திருப்பத்தூர், அரக்கோணம் என வெகுதூரத்தில் இருந்து வந்தவர்கள் நள்ளிரவே பஸ்கள் மூலம் வேலூர் வந்து நேதாஜி ஸ்டேடியம் வெளியில் சாலையோரம் நடைபாதையில் வரிசையில் காத்திருந்தனர். காலை 6.30 மணிக்கு தேர்வு நடைபெறும் நேதாஜி ஸ்டேடியத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

உடனடியாக ஒவ்வொருவரின் கல்விச் சான்றிதழ் உட்பட அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டது. மேலும் அழைப்பு கடிதத்தில் புகைப்படம் இல்லாதவர்களின் புகைப்படங்கள் வாங்கி சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு உயரம், மார்பளவு ஆகியவை அளக்கப்பட்டது. தொடர்ந்து 1500 மீட்டர் ஓட்டம் நடந்தது. இத்தேர்வு மதியம் வரை நடந்தது. இத்தேர்வை டிஐஜி தேவராணி, எஸ்பி மதிவாணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இன்று 21ம் காலை 6.30 மணிக்கு 350 விண்ணப்பதாரர்களுக்கும், 8.30 மணிக்கு 252 விண்ணப்பதாரர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் மற்றும் மார்பளவு அளத்தல் மற்றும் 1500 மீட்டர் ஓட்டம் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 2ம் கட்டமாக உடற்தகுதி தேர்வு நாளை மற்றும் நாளை மறுதினமும் நடைபெறுகிறது.

தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் அரைக்கால் சட்டை மற்றும் டி-சர்ட் அணிந்து கொண்டு கலந்துகொள்ள விரும்பினால் ஒரே வண்ணம் கொண்ட சட்டை மற்றும் எவ்வித எழுத்துக்களும் படங்களும் இல்லாத டி சர்ட் அணிந்து வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் எவ்வித பயிற்சி மையத்தின் அடையாளமோ அல்லது சின்னமோ கொண்ட டி-சர்ட் அணிந்து கொண்டு வரும்பட்சத்தில் உடற்தகுதி தேர்வில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதேபோல் இத்தேர்விற்கு வருபவர்கள் எவ்வித செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை உடன் கொண்டு வரக்கூடாது. அனைவரும் தவறாமல் தங்களது தலைமுடியை சீராக திருத்தம் செய்து வரவேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

The post 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் 600 பேர் பங்கேற்பு நள்ளிரவிலேயே வந்து காத்திருந்த இளைஞர்கள் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நடந்த appeared first on Dinakaran.

Tags : Level ,Netaji Stadium ,Vellore ,Vellore Netaji Stadium ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி