விழுப்புரம், ஆக. 20: விழுப்புரம் மாவட்டம் நெடிமொழியனூரை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகன் சதீஷ்குமார். நேற்று சங்கீதா தனது மகனுடன் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவரை பிரிந்து 2 குழந்தைகளை வைத்து வளர்த்து வருகிறேன். இருவரும் தாய் பராமரிப்பில் ரெட்டணை தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மூத்த மகன் சதீஷ்குமார் 10ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மாதம் 20ம் தேதி பள்ளிக்கு சென்ற போது கணித ஆசிரியர் எனது மகன் அணிந்திருந்த ஆடை சம்பந்தமாக சக மாணவர்கள் மத்தியில் தவறாக பேசி தாக்கியதில் காதில் ரத்தக்கசிவு ஏற்பட்டு வீக்கமடைந்தது. பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது ஆசிரியர் தாக்கியதில் காதின் ஜவ்வு கிழிந்துள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லையென்றால் முழுமையாக செவித்திறன் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது என்று கூறினர். தனியார் மருத்துவமனைக்கு சென்ற போதும் இதனையே கூறினார்கள்.
பின்னர் பள்ளிக்கு சென்ற போது தாளாளர், முதல்வர், ஆசிரியர் தவறை ஒப்புக்கொண்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்வதாக கூறி அனுப்பி வைத்தனர். பின்னர் பல அரசியல் கட்சி பிரமுகர்கள், வெளிநபர்கள் அழைத்து புகார் அளித்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர். பெரியதச்சூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த போது பள்ளி தாளாளர், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் ஆசிரியர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றத்தை மறைத்து மிரட்டிய பள்ளி தாளாளர், முதல்வர் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனது மகன் எதிர்காலம் வீணாகி விட்டது. செவித்திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பள்ளி மீதும், ஆசிரியர், முதல்வர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மகனை தாக்கிய ஆசிரியர், அந்த குற்றத்தை மறைத்து என்னை மிரட்டிய தாளாளர், முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுத்து சிகிச்சைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post திண்டிவனம் அருகே ஆசிரியர் தாக்கியதில் மாணவன் செவித்திறன் பாதிப்பு தனியார் பள்ளி மீது நடவடிக்கை கோரி புகார் appeared first on Dinakaran.