×

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வரிசை கட்டி நின்ற வாகனங்கள்: போக்குவரத்து போலீசார் சீரமைத்தனர்

தாம்பரம்: சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள மாணவர்கள், பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் மாலை முதல் ஏராளமான பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள் மூலம் சென்னைக்கு திரும்ப தொடங்கினர். இதனால், நேற்று முன்தினம் மாலை முதல் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் நேற்று அதிகாலை ஏராளமானோர் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் நேற்று காலை திருவண்ணாமலை கிரிவலம் தொடங்கியுள்ளதால், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருந்து ஏராளமானோர் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை கிரிவலத்தில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை நோக்கிச் சென்றனர். திருவண்ணாமலை கிரிவலத்திற்காக அரசு சார்பில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

எனவே, பொதுமக்கள் சிறப்பு பேருந்துகள் மூலமும், சொந்த வாகனங்கள் மூலமும் புறப்பட்டுச் சென்றதால் தாம்பரம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம் மார்க்கத்தில் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த, போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய ஜிஎஸ்டி சாலை முழுவதும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

The post தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வரிசை கட்டி நின்ற வாகனங்கள்: போக்குவரத்து போலீசார் சீரமைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tambaram GST road ,Tambaram ,Independence Day ,Dinakaran ,
× RELATED தாம்பரம் ரயில்நிலையத்தில் பறிமுதல்...