×

தாம்பரம் ரயில்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி உரிமைக்கோரியவரின் பணமில்லை: சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தகவல்

சென்னை: தாம்பரம் ரயில்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி உரிமைக்கோரியவரின் பணமில்லை என சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணமானது பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கொண்டு சென்றதாக 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாஜகவின் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என வாக்குமூலம் அளிக்கப்பட்டது. அதனை அடிப்படையாக வைத்து வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ரூ.4 கோடி பணமானது யாருடையது என பாஜக நிர்வாகியான நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட பல்வேறு பாஜக நிர்வாகிகள் மற்றும் இதற்கு தொடர்புடையதாக கூறப்பட்ட நபர்கள் என மொத்தம் 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் திடீரென ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபா என்பவர் ரூ.4 கோடி பணம் தன்னுடையது என உரிமை கோரி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேரோண்டனர். குறிப்பாக இந்த பணம் தன்னுடையது என உரிமை கோரியதற்கு இந்த பணம் எப்படி கிடைத்தது. இந்த பணத்தை யாரிடம் கொடுத்து அனுப்பினர் என்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொன்டு வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், போலீசார் முஸ்தபாவிடம் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் இந்த பணத்தை முஸ்தபா உரிமை கோரிய நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவருடைய பணம் இல்லை என சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும், அவரிடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போது யாரோ ஒருவர் கூறிதான் இந்த பணத்திற்கு முஸ்தபா உரிமை கோரியதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அவரது வங்கி கணக்கையும் போலீசார் ஆய்வு செய்த நிலையில் அவரது பணம் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. முஸ்தபாவிடம் சொல்லி உரிமை கோரா சொன்னது யார் என்ற கோணத்தில் தற்போது அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கானது கடைசிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முஸ்தபாவின் செல்போன் ஆதாரத்தை வைத்து அடுத்தகட்டமாக பணம் யாருடையது என தெரியவரும் என சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தாம்பரம் ரயில்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி உரிமைக்கோரியவரின் பணமில்லை: சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram railway ,CBCID ,CHENNAI ,Tambaram railway station ,Dinakaran ,
× RELATED தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி...