×

நாய் வளர்ப்பு சிம்பிள் விஷயம்!

நன்றி குங்குமம் தோழி

டாக் டிரெயினர் சத்யா

சமீபத்தில் குழந்தைகளை நாய் கடிக்கும் வீடியோக்கள் வலைத்தளங்களில் தொடர்ச்சியாய் வைரலாக, அது குறித்த கேள்விகளோடு டாக் டிரெயினராக வலம் வரும் சத்யாவைச் சந்தித்தபோது…

‘‘முன்பெல்லாம் நாய்களை பற்றிய நல்ல கதைகளை நிறைய கேட்டிருப்போம். ஆனால் இன்று நாய்கள் கடிக்கும் செய்திகள்தான் அதிகமாக வருகிறது. நாய்களுக்கு சாப்பாடு சரியா இல்லை என்றாலும் அட்டாக் பண்ணும்… மேட்டிங்காகத் தன் இணையைத் தேடும்போதும் அட்டாக் பண்ணும்’’ என்ற சத்யா, ‘‘குழந்தைகள் கேட்பதற்காக நாய் குட்டி ஒன்றை வாங்கிக் கொடுத்து, பிறகு அது வளர்ந்ததும் கொலைக்குது, கடிக்கிது, வீட்டுக்குள் அசிங்கம் பண்ணுது என அதைக் கைவிடுவதை தடுப்பதற்காகவும், நாய் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வைக் கொடுப்பதற்காகவும்தான் டாக் டிரெயினராக பயிற்சி எடுத்து நாங்கள் இருக்கின்றோம்’’ என பேச ஆரம்பித்தார்.

‘‘மனிதன் காலம் காலமாக விலங்குகளை சார்ந்துதான் வாழ்ந்து வருகிறான். முன்பெல்லாம் தெரு நாய்களுக்கு பலரும் மிச்சம் மீதியாகும் உணவுகளைக் கொடுப்பார்கள். பதிலுக்கு நன்றிக் கடனாய் அந்தத் தெருவையே அது காவல் காக்கும். இப்போதெல்லாம் தெரு நாய்களுக்கு உணவளிப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் தெரு நாய்கள் குப்பைகளைக் கிளறி உண்ண ஆரம்பித்து, அப்படியே உணவுக்காக மற்ற நாய்களோடு சண்டை போட ஆரம்பிக்கிறது. இந்த சண்டையில் இடையில் கிடைப்பவர்களையும் தெரு நாய்கள் தாக்கத் தொடங்குகின்றன. சமூகம் மாற்றம் அடையும் போது விலங்குகளிடம் அந்த மாற்றம் நிகழ்கிறது என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.

5 வயதில் தொடங்கி 25 வருடமாக நாயோடுதான் எனக்கு வாழ்க்கை நகருது. நாம வீட்டுக்குள் நுழையும்போது நம் வருகையை பார்த்து, நம் வளர்ப்புப் பிராணியான நாய்தான் மகிழ்ச்சியை பயங்கரமாக வெளிப்படுத்தும். தன் அன்பைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். நமது வளர்ப்பு நாயின் பிரச்னை என்ன என்பதைக் கண்டுபிடித்து அதை சரி பண்ணிட்டாலே, பல வருடங்கள் தொடர்ந்து சமத்தா… மகிழ்ச்சியாக நடைபோடும்’’ என்றவர், குழந்தையில் என்னை பாசத்துடன் பார்த்துக்கிட்டதே நாய்தானாம் என்றார் புன்னகைத்து.

‘‘பெண்களுக்கு அம்மா வீட்டில் தலை பிரசவம் என்பதால், அம்மாச்சியின் வீட்டில் இருந்த நாய்தான், நான் அழுதால் வீட்டில் இருக்கும் பெரியவர்களை அழைக்குமாம். அங்கும் இங்கும் ஓடி எனக்கு விளையாட்டுக் காட்டுமாம். பிறப்பிலே நாயுடன் எனக்கு பந்தம் இருந்தது’’ என்று மீண்டும் சிரித்தவர், ‘‘நான் வளர வளர எனக்குன்னு ஒரு டாக் வேணும் என பெற்றோரிடம் அடம் பிடித்து, தெருவில் குட்டி போட்ட நாய் அல்லது தெரிந்தவர்கள் வீட்டில் குட்டி போட்ட நாய் வேண்டுமெனக் கேட்டு வாங்கி வளர்த்தேன்.

அப்போ எனக்கு 11 வயது. நாய் பராமரிப்பிற்கான மொத்த பொறுப்பையும் பெற்றோர் என்னிடமே ஒப்படைத்து விட்டனர். நான் சிங்கிள் சைல்ட் என்பதால் நாயுடன் பொழுதைக் கழிப்பது பிடித்திருந்தது. அதனுடைய ஒவ்வொரு அசைவும் என்ன என்பது நன்றாகவே எனக்குத் தெரியும்’’ என்றவர், ‘‘தெரியாத நபர் வரும்போது நாய் எப்படி குறைக்குது. தெரிந்தவர்களிடம் எப்படி பழகுது. பசித்தால்… தாகம் எடுத்தால்… அதன் பிஹேவியர் என்ன என எல்லாவற்றையும் கவனிக்கத் தொடங்கி, 24 மணி நேரமும் வளர்ப்பு நாயுடனே இருந்ததில், நாய் எப்ப எப்படிக் கோபத்தை வெளிப்படுத்தும், மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்தும், பிடிக்காத விஷயத்தில் எப்படி ரியாக்ட் செய்யும், எந்த இடங்களில் தொட்டால் அதற்குப் பிடிக்கவில்லை, அதற்கான மூட் ஸ்விங் நேரம் போன்ற விஷயங்களையும் தெரிந்துகொண்டேன்.

என் நாய் ஒல்லியா, உயரமா வேட்டைக்கு போகிற நாய் மாதிரியான தோற்றத்தில் இருந்தது. அணில், காக்கா, எலி வரை எந்த ஜீவராசியும் என் வீட்டு காம்பவுண்ட் சுவற்றில் நிற்கக்கூட முடியாது. 6 அடி சுவற்றை அசால்டாக குதித்து ஏறி விரட்டி அடிக்கும். நான் +2 படித்தபோது திடீரென அது இறந்துவிட, பிறகு கல்லூரி படிக்கும்போது மீண்டும் ஒரு குட்டியை எடுத்து வளர்க்க ஆரம்பித்தேன். படிப்பு முடியும்வரை, நாய் வளர்ப்புக்கும் பயிற்சியாளர் இருக்கிறார்கள், வகுப்புகள் இருக்கிறது என்பதே எனக்குத் தெரியாது.

ஒருநாள் நாய் பயிற்சி வழங்கும் காணொளி ஒன்றை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. நாம் இடும் கட்டளைகளை செய்ய வைப்பது… பாதுகாப்புக்கு பழக்கப்படுத்துவது… டாக் ஷோ போன்ற விஷயங்களுக்கு அழைத்துச் செல்வது எனத் தனித்தனியாக பயிற்சியாளர்கள் இருந்தனர். அதைப் பார்த்து, எனக்குள்ளும் டாக் டிரெயினராகும் எண்ணம் வர ஆரம்பித்தது. அப்போது எம்பிஏ முடித்து தனியார் நிறுவனத்தில் தற்காலிக பணியில் இருக்கிறேன்.

ஒரு நாள் விபத்தில் சிக்கி எனது நாய் நடக்க முடியாமல் முடங்கிவிட, கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றதுடன், நாய்க்கு பிசியோதெரபி மற்றும் வாட்டர் தெரபி கொடுக்கும் நபரை தேடிஅலைந்தேன். மிகப்பெரிய தேடுதலுக்குப் பிறகே, நாய்களுக்கு முறையான பயிற்சி வழங்கும் பயிற்சியாளர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நாயை பார்வையிட்டு, ஒன்றிரண்டு பயிற்சிகளை செய்ய வைக்க கற்றுக் கொடுத்தார். அவனைத் தூக்கி நிற்க வைக்கவே எனக்கு 3 மாதங்கள் எடுத்தது.

வாட்டர் தெரபி, பிசியோதெரபி, நடைப்பயிற்சி என செய்ததில் ஓராண்டுக்குப் பிறகு மெதுவாக எழுந்து நிற்கவும், நடக்கவும் ஆரம்பித்தான். அதன்பிறகே முறையான நாய் வளர்ப்பு குறித்த பயிற்சியில் நானும் இறங்கினேன். பொமரேனியன் நாய்கள் ஏன் எந்நேரமும் கத்திக்கொண்டே இருக்கிறது, அதன் பழக்க வழக்கம் என்ன?

ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களை எதனால் ராணுவத்திலும், காவல் துறையிலும் பயன்படுத்துகிறார்கள்? ராட்வைலர் நாய்களை பார்த்து ஏன் பயப்படுகிறோம் போன்ற விஷயங்கள் தெளிவாகப் புரிய ஆரம்பித்தது.அடிப்படையில் நாயிடம் இருப்பது 4 குணங்களே. ஒன்று சண்டை போடுவது அல்லது தவிர்ப்பது… இரண்டாவது சரண்டராவது அல்லது அந்த இடத்தைவிட்டு ஓடுவது. இந்த நான்கு விஷயங்களையே இக்கட்டான சூழலில் நாய்கள் செய்யும். நாம்தான் முடிவு செய்ய வேண்டும். அதை என்ன செய்ய வைக்க வேண்டும் என்பதை.

அந்தந்த பயன்பாட்டுக்கு எனச் சிலவகை நாய்கள் இருக்கிறது. இந்தியன் ப்ரீட் நாய்களை நம் வீட்டில் இருக்கும் உணவுகளை கொடுத்து இயல்பாய் வளர்க்கலாம். ஆனால் புரொஃபஷனல் டாக்ஸ் எனும்போது வேறுமாதிரியான உணவு கொடுத்து வளர்க்க வேண்டும். ராட்வைலரை ஆசைப்பட்டு வாங்கி வீட்டில் வைத்து, அது என்னைப் புடிச்சு இழுக்குது… கடிக்குது என்றால் எப்படி? இதற்கு தாடை பெரியதாக இருப்பதுடன், புல்லிங் பவர் அதிகமாக இருக்கும்.

அதன் எடையை விட மூன்று மடங்கு எடையினை அதனால் இழுக்க முடியும். சுமைகளை நிறைய இழுப்பதற்காகவே இந்த நாய்கள் பயன்பட்டன. இதை நக்ஸல் டாக் என்பார்கள். அதேபோல் தடை செய்யப்பட்ட சைபீரியன் ஹஸ்கி நாய் எப்போதும் யாரைப் பார்த்தாலும் கடிக்கும் எண்ணத்திலே இருக்கும்.

இது பார்க்க அழகாக இருப்பதால் ஆசைப்பட்டு சிலர் வாங்கி வீட்டில் வளர்க்கிறார்கள். நாய் வளர்ப்பு சிம்பிள் விஷயம். ஒரு குடும்பத்தில 3 பேர்தான் இருப்பார்கள். ஆனால் அவர்களின் குழந்தை லாப்ரடாரை விரும்பாமல், ஷெப்பட் அழகாக இருக்கிறதெனக் கேட்டு வாங்கும். 3 நபர்கள் மட்டுமே இருக்கும் வீட்டுக்கும், அவர்களின் போக்குவரத்துக்கு ஷெப்பட் செட்டாகாமலே போகும். நம் கமிட்மென்ட் மற்றும் தேவை உணர்ந்து நமக்கான நாய் எது என்பதை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும்.

இதில் நாய்களுக்கு நான் கொடுப்பது அடிப்படை பயிற்சி. 3 மாதக் குட்டியில் தொடங்கி 6 வயது நாய்கள் வரை பயிற்சி கொடுக்கிறேன். 3 மாதக் குட்டியை சுலபமாய் பழக்கலாம். வயது ஏற ஏற நாயின் க்ராஸ் பவர் குறையும்.அதாவது, நாம் சொல்வதைக் கேட்டு கீழ்படியக் கற்றுத் தருவது. வீட்டில் இருக்கும் உணவுகளில் வாய் வைக்காமல் இருப்பது. குறிப்பிட்ட இடத்தில் உணவை வைத்து அந்த இடத்தில்தான் சாப்பிட வேண்டும் என்பதை பழக்கப்படுத்துவது.

சாப்பிட்டு முடித்த குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வெளியில் அழைத்துச் சென்று சிறுநீர், மலம் கழிக்க பழக்கப்படுத்துவது போன்ற பயிற்சிகள் இருக்கும். கூடவே அந்த ஏரியாவில் இருக்கின்ற நாய்களையும் அது பார்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களைத் தாண்டி, பக்கத்து வீடுகளில் உள்ளவர்களையும் தொடப் பழக்கப்படுத்த வேண்டும்.

அடுத்தது பாதுகாப்புக்கு பழக்கப்படுத்தும் பயிற்சி(Professional). ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயினை, வீட்டில் வைத்து குழந்தைகளோடு விளையாடுவதற்கான நாயாகவும் பழக்கப்படுத்தலாம். அதே நாயினை, இரவு பகலாக வீட்டை பாதுகாக்கவும், தோட்டத்தை பாதுகாக்கவும் பழக்கப்படுத்தலாம். ஒரு நாயின் பயன்பாடு என்ன? அது எப்படி பழகும். அதை நாம எப்படி கையாள்வது என்பதே இதில் முக்கியம்.

சிலர் என்னோட நாயை பார்த்து பாராட்டணும்… டாக் ஷோக்களுக்கு அழைத்துச் செல்லணும் என்பார்கள். இது அடுத்த லெவல். இதற்கு கொடுக்கப்படும் பயிற்சி ஷோ டிரெயினிங் பயிற்சி. எனக்கும் அடுத்தடுத்த பயிற்சிகளை எடுத்து ஒரு மிகப்பெரிய புரொஃபஷனல் டாக் டிரெயினராக வரவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது” என்றவாறு விடை பெற்றார் டாக் டிரெயினர் சத்யா.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: வெற்றி

The post நாய் வளர்ப்பு சிம்பிள் விஷயம்! appeared first on Dinakaran.

Tags : Kunkum Doshi ,Satya ,Dinakaran ,
× RELATED கல்யாண ராணி சத்யாவை ஜாமீனில் விடுவிக்க ஐகோர்ட் ஆணை..!!