×

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா: 22ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம்

புதுடெல்லி: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெற இருக்கிறது. ஒன்றிய அரசு கடந்த 8ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்தது. வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபர்களை உறுப்பினர்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் சட்டத்தில் இடம்பெறும் வகையில் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உருவாக்கியது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் வலியுறுத்தலைத் தொடர்ந்து, இந்த மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் மக்களவையில் அறிமுகம் செய்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெற இருக்கிறது. அப்போது பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழுவினரை, சிறுபான்மையினர் விவகாரம், சட்டத் துறை அமைச்சகப் பிரதிநிதிகள் சந்தித்து, மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து விளக்கம் அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்து, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் தனது அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக் குழு தாக்கல் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா: 22ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Parliamentary ,Committee ,New Delhi ,Joint Parliamentary Committee ,Union Government ,Lok Sabha ,Parliamentary Joint Committee ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவின் நிர்வாகிகள் நியமனம்