×

திற்பரப்பு அருவி அருகே கோதையாற்று வெள்ளத்தில் சிக்கிய கேரள சுற்றுலா பயணிகள் 3 பேர் மீட்பு

குலசேகரம்: திற்பரப்பு அருவி அருகே கோதையாற்று வெள்ளத்தில் சிக்கிய கேரள சுற்றுலா பயணிகள் 3 பேரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மீட்டனர்.குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பருவ மழை பெய்து வருவதால் கோதையாற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்றும் விடுமுறை நாள் என்பதால் கூட்ட நெரிசல் அதிகம் இருந்தது. இந்நிலையில் குமரி மாவட்ட மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று மதியம் 1 மணியளவில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 376 கன அடி உபரிநீர் கோதையாற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் நேற்று மதியம் 3 மணி முதல் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அருவியில் மட்டுமல்லாமல் அருவிக்கு மேல் உள்ள தடுப்பணையிலும் அருவியில் இருந்து பாய்ந்து செல்லும் கோதையாற்றிலும் சுற்றுலா பயணிகள் கும்பல் கும்பலாக நீராடுவது வழக்கம். வெளியூர்களில் இருந்து பாத்திரங்களுடன் குழுவாக வருபவர்கள் அருவியில் கீழ் பகுதியில் உள்ள ஆற்றின் கரையோர பகுதிகளில் அமர்ந்து சமையல் செய்து உண்டு, ஆற்றில் குளித்து பொழுது போக்குவது வழக்கம். இவ்வாறு வருவோர் ஆற்றின் நடுப்பகுதிகளில் உள்ள பாறைகளில் அமர்ந்து உணவு அருந்துவதும் மது அருந்தி உற்சாகத்தில் மிதப்பதும் உண்டு.

நேற்றும் இதுபோல் ஏராளமானோர் சமையல் செய்து மதிய உணவு உண்டு ஆற்றில் குளித்த வண்ணம் இருந்தனர். இதுபோல் கேரளாவைச் சேர்ந்த 3 பேர் சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் அருவி சுற்றிப்பார்த்து விட்டு ஆற்றின் கரை வழியாக நடந்து ஆற்றின் மறுபகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு தாங்கள் கொண்டுவந்த உணவை சாப்பிட்டு விட்டு மது அருந்தியுள்ளனர். நேற்று லேசான சாரலுடன் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் இவர்கள் மதுபானங்கள் அனைத்தையும் குடித்து விட்டு போதையில் இருந்துள்ளனர். மதியம் 3 மணிக்கு மேல் உபரிநீர் வரத்தொடங்கியதால் கோதையாற்றின் நீர்மட்டம் உயரத்தொடங்கியது. இதனால் ஆற்றின் கரையோரம் நின்று குளித்துக்கொண்டு இருந்தவர்கள், மறுபக்கத்தில் இருந்த இவர்களிடம் ஆற்றில் தண்ணீர் அதிகரிக்கிறது சீக்கிரம் கரை திரும்புங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்களால் எழுந்து சரியாக நடக்க முடியவில்லை. இருந்தும் சமாளித்து நடந்து ஆற்றில் உள்ள ஒரு பாறையில் ஏறி அமர்ந்துள்ளனர். அதற்கு மேல் வரமுடியவில்லை. அவர்களில் சற்று தௌிவுடன் இருந்த ஒரு நபர் அப்பகுதியில் இருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

அப்போது சிலர் அங்கு சென்ற அவர்களை மீட்டு அழைத்து வர முயன்ற போது வெள்ளம் அதிகரித்ததால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வ முருகேசன் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்று மாலை சுமார் 5 மணிக்கு மீட்பு பணியை தொடங்கினர். அவர்களுக்கு உதவியாக அப்பகுதியில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் களம் இறங்கினர். தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆற்றை கடந்து சென்று பாறையில் சிக்கியிருந்த 3 பேரையும் மிதவைகள் உதவியுடன் கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி 3 பேரையம் இரவு 7 மணியளவில் கரை சேர்த்தனர். உபரிநீர் திறந்து விடப்பட்ட நிலையில் 3 பேரையும் பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர் மற்றும் அவர்களோடு இணைந்து செயல்பட்ட பொதுமக்களையும் அனைவரும் பாராட்டினர்.

 

The post திற்பரப்பு அருவி அருகே கோதையாற்று வெள்ளத்தில் சிக்கிய கேரள சுற்றுலா பயணிகள் 3 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kothaiyartu flood ,Tilparapu ,Kodaiyarth ,Tilparapu waterfall ,Kumari district ,Kodaiyartu ,Dinakaran ,
× RELATED கேரளாவில் நிபாவுக்கு கல்லூரி மாணவர் பலி: தீவிர கட்டுப்பாடுகள் அமல்