×

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவு!

சென்னை: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவு செய்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில், கலைஞர் நாணயத்தை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறையும், 13 முறை சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல் ஓராண்டுக்கு கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

இதன் ஒரு பகுதியாக கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, ஒன்றிய அரசும் அனுமதி வழங்கியது. இந்நிலையில், கலைஞரின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தொடர்ந்து கலைஞர் பற்றிய சிறப்பு காணொலி ஒளிபரப்பப்பட்டது. இதனை அனைவரும் கண்டு ரசித்தனர். அதன் பிறகு கலைஞரின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இதனை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். 100 ரூபாய் நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கலைஞரின் கையெழுத்துடன் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலைஞருக்குப் பாராட்டு மழை பொழிந்தார். அதற்க்கு, ராஜ்நாத்சிங்க்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டு X தள பதிவில் கூறியதாவது; கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு, கலைஞருக்குப் பாராட்டு மழை பொழிந்தீர்கள். கூட்டாட்சி, இந்திய ஜனநாயகம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பை நேர்த்தியாக எடுத்துரைத்துள்ளீர்கள். தெற்கிலிருந்து உதித்த சூரியனுக்கு இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்திய தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவு! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Rajnatsingh ,Tamil Nadu ,Chief Minister ,MLA K. ,Stalin ,Chennai ,MLA K. Stalin ,Artist Centennial Festival ,Chennai Kalaivanar Arena ,Principal ,Mu. K. ,Rajnatsingh, ,
× RELATED இந்தியாவில் வாகன உற்பத்தியில்...