* கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது
* 24,468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்
சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 24,468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 1916.41 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று காலை தொடங்கி வைத்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப் பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளை நல்ல முறையில் பராமரித்தல், பாசனக் கட்டமைப்புகளான அணைகள், அணைக்கட்டுகள், நிலத்தடி தடுப்புச் சுவர்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் போன்றவற்றை உருவாக்குதல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பல்வேறு முக்கியப் பணிகளை தமிழக நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அத்திக்கடவு – அவிநாசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கைகளை ஏற்று 1972ம் ஆண்டில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்திட முனைந்து நடவடிக்கைகளை கலைஞர் மேற்கொண்டார். அந்நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் 1976க்குப் பின் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் 1996ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கலைஞர் இத்திட்டம் குறித்து மறுபடியும் ஆய்வு செய்து, திட்டத்தினை நிறைவேற்றிட ஒப்புதல் வழங்கினார். ஆனால் ஆட்சி மாற்றம் எற்பட்டதால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.
பின்னர், 2019ல் இத்திட்டத்தைத் தொடங்கி நிறைவேற்றும் பணிகள் தொடர்ந்தன என்றாலும், 2021ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்தபின்தான், இத்திட்டத்தினை நிறைவேற்றிட உறுதிபூண்டு, 1,916.417 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத் திட்டப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ளன. சோதனை ஓட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில், 1065 கி.மீ. நீளத்திற்கு நிலத்தடியில் குழாய்ப் பதிப்பின் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட
பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள், என மொத்தம் 1045 எண்ணிக்கையிலான ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படும்.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் மன்மதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஈரோட்டிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர்கள் சு. முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், எம்பி, கே.இ. பிரகாஷ் எம்எல்ஏக்கள் ஈ.ஆர். ஈஸ்வரன், வெங்கடாசலம், சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், கோயம்புத்தூர் கலெக்டர் கிராந்தி குமார் பாடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரசுக்கு நன்றி தெரிவித்து முழக்கம்
திட்டத்திற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட ஈரோடு, திருப்பூர்,கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். அப்போது, 65 ஆண்டுகால கனவு திட்டத்தை நனவாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும்,தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்து முழக்கம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் விளக்கம்
அவிநாசி-அத்திக்கடவு திட்டத்திற்காக பவானி ஆற்றில் நீரேற்று நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆற்றில் வரும் தண்ணீர் நீரேற்று நிலையம் செல்வதையும், நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குளம், குட்டைகளுக்கு கொண்டு செல்லப்படுவதையும், இதற்காக பொருத்தப்பட்டுள்ள ராட்சத மின்மோட்டார்களையும் நேற்று விவசாயிகள் நேரில் பார்வையிட்டனர். அவற்றின் செயல்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்
அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதும், பவானி ஆற்றில் இருந்து உபரிநீர் முதலாவது நீரேற்று நிலையம் மூலமாக நீரேற்றம் செய்யப்பட்டது. இந்த தண்ணீர் பெருந்துறை அருகே முதலாவது குளமான மாந்தம்பாளையம் குளத்திற்கு சென்றது. தண்ணீர் குளத்திற்கு வந்ததை கண்ட அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்து வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, ஐஆர்டிடி குளம், சீரானம்பாளையம் குளம், பெரியகுளம் உள்ளிட்ட அடுத்தடுத்த குளங்களுக்கு தண்ணீர் சென்றது.
The post ரூ.1,916 கோடி செலவில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.