×

மருத்துவமனை, ஓட்டல்களில் ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் கண்காணிப்பு: வருமான வரித்துறைக்கு ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஓட்டல், மருத்துவமனைகள், விலையுயர்ந்த பிராண்ட் பொருட்கள், ஐவிஎப் கிளீனிக்குகள் போன்றவற்றில் அதிகப்படியான ரொக்க பண பரிவர்த்தனைகளை சரிபார்த்து ஆய்வு செய்ய வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) உத்தரவிட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வருடாந்திர செயல் திட்ட ஆவணமான மத்திய செயல்திட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், ‘ரூ.2 லட்சத்துக்கும் மேல் ரொக்கப் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் போது அது குறித்து நிதி பரிவர்த்தனை அறிக்கை (எஸ்எப்டி) மூலம் நிறுவனங்கள் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், வருமான வரிச்சட்டம் 139ஏன் படி, மேற்கண்ட குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் நிரந்தர கணக்கு எண் (பான்) பெறப்பட வேண்டும். ஆனால் இந்த விதிகளை மீறுவது பரலவாக நடக்கிறது. எனவே இது போன்ற அதிக ரொக்கப் பண பரிவர்த்தனை செலவினங்களை வரி செலுத்துவோரின் தகவலுடன் சரிபார்த்து வருமான வரித்துறை ஆய்வு செய்ய வேண்டும். இதில் விதிமீறல் குறித்த ஆதாரங்களை கண்டறிவது கட்டாயமாகும். மேலும், கடந்த 2023 ஏப்ரல் 1ல் ரூ.24,51,099 கோடியாக இருந்த வருமான வரி நிலுவைத் தொகை 2024 ஏப்ரல் 1ல் ரூ.43,00,232 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே, வரி நிலுவைத் தொகையை வசூலிக்க, அதிகப்படியான நிலுவை கொண்ட முதல் 5,000 வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து நிலுவை வரிகள் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

The post மருத்துவமனை, ஓட்டல்களில் ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் கண்காணிப்பு: வருமான வரித்துறைக்கு ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union government ,NEW DELHI ,Central Board of Direct Taxes ,CBDT ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை...