×

புற்றுநோயுடன் போராடி வென்ற புன்னகை அரசி

நன்றி குங்குமம் தோழி

இயற்கை நம் வாழ்விற்கான சந்தோஷங்களையும், சங்கடங்களையும் சேர்த்தே கொடுக்கிறது. சிலருக்கு இந்த விகிதாச்சாரங்களில் மாற்றம் ஏற்படும் போது அப்பக்கங்கள் கண்ணீரால் எழுதப்பட்டு விடுகிறது. சிலர் அங்கேயே துவண்டு போய்விடுகிறார்கள். சிலர் கண்ணீரை அடக்கி வைரத்துளிகளாய் அடைகாத்து இயற்கைக்கு பரிசளிக்கின்றனர். கண்ணீர்த் துளிகளை
வைரமாய் புடம் போட்ட கதைதான் நான்சியினுடையது.

‘‘நான் கடந்த 25 வருடங்களாக ஊடகத் துறையில் பயணித்துக் கொண்டிருக்கேன். செய்தியாளராக துவங்கிய என் பயணம் அதனைத் தொடர்ந்து துணை ஆசிரியர், மற்றும் ஊடகத் துறையில் நிர்வாகப் பிரிவு என அந்தத் துறையின் அனைத்து பிரிவிலும் நான் வேலை பார்த்து விட்டேன். 1997ல்தான் என் ஊடகப் பயணம் சன் தொலைக்காட்சியில் துவங்கியது. அங்கு செய்தியாளராக சேர்ந்தேன். அதன் பிறகு பல தொலைக்காட்சியில் வேலை பார்த்தேன்.

தற்போது ஃப்ரீலான்ஸ் முறையில் செய்தியாளராக பணியாற்றி வருகிறேன். என் தாத்தா சாலமன் அப்பாதுரை , அப்பா பெஞ்சமின் அப்பாதுரை இருவருமே ஊடகத்துறையில் செய்தியாளராக பணியாற்றியவர்கள். தற்போது என் இரண்டு மகன்களுமே என்னைத் தொடர்ந்து அதே துறையில் பணியாற்றி வருகின்றனர். எங்க குடும்பத்தில் ஊடகத்துறையில் நான்கு தலைமுறையாக பணியாற்றி வருகிறோம் என்று சொல்லலாம்.

செய்தியாளர்கள் பணி எப்போதுமே சுவாரஸ்யமாக இருக்கும். குறிப்பாக தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் போது, செய்திகளை உடனுக்குடன் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள், சமூகப் பிரச்னைகள், வாழ்வியல், கள நிலவரங்களைச் சொல்கிறவர்களாக மட்டுமே ஒரு செய்தியாளர்களின் பணி நிறைவடைந்து, அவர்களுடைய வாழ்வு சொல்லப்படாமலே கடந்து போய் விடுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன் சன் தொலைக்காட்சியில் செய்தியாளர் பணி என்பது எனக்கு மிகப்பெரிய கனவு.

அந்தக் கனவு நிறைவேறிய போது என்னுடைய சந்தோஷத்திற்கு அளவே இல்லைன்னுதான் சொல்லணும். காரணம், ஒரு பெண்ணாக நான் இந்த துறையில் சேர்ந்த போது ஆரம்பத்தில் பதட்டம் இருந்தது. ஆனால் களப்பணிக்கு போகும் போதுதான் புரிந்தது, இந்தப் பணியில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது என்று. வீரப்பன், மேட்டூர் அணை விவகாரம் தொடர்பான செய்திக்காக களத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டேன். அப்போது இப்போது இருக்கும் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ச்சி அடையவில்லை.

ஒளிப்பதிவு செய்த கேசட்டை கோவை அலுவலகத்துக்கு பேருந்தில் அனுப்பி அங்கிருந்து தலைமை அலுவலகத்திற்கு uplink செய்யவேண்டும். குறிப்பாக காட்சி ஊடகத்தின் ஆகப்பெரும் வெற்றி, செய்தியை முந்தித் தருவது. திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் கொண்டுவர முடியாவிட்டால் அது பழைய செய்தி ஆகிவிடும். செய்தியை எடுப்பது ஒரு சவால் என்றால் அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது மற்றொரு சவால்’’ என்றவர், தன் வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த சம்பவம் குறித்து விவரித்தார்.

‘‘என்னுடைய கணவரும் அதே ஊடகத் துறையை சேர்ந்தவர்தான். நாங்க இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவரும் குழந்தைப்பேறுக்காக எதிர்பார்த்திருந்த போது அதற்கான மாற்றங்கள் உடலில் தெரியவே மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றேன். மிகவும் சந்தோஷமாக நானும் என் கணவரும் அந்த முடிவுக்காக காத்திருந்தோம். ஆனால் எங்களின் சந்ேதாஷத்தில் பெரிய அணுகுண்டு ஒன்றை டாக்டர்கள் தூக்கிப் போட்டனர். அந்த செய்தியை அவர்கள் சொன்ன போது என் கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. இப்போது கூட அந்த அதிர்ச்சியை நினைத்தாலும் மனம் தடுமாறும். அவர்கள் என்னிடம், ‘புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறீர்கள்.

உடனடியாக மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்கள். உடனே நான் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கடைசி நிலையில் உடலில் பல இடங்களுக்கு கேன்சர் பரவிவிட்டதால், நான் சில காலம்தான் உயிரோடு இருப்பேன் என்றும் டாக்டர்கள் சொல்லிட்டாங்க. நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கையை மனதளவில் அப்பவே இழந்துவிட்டேன். நான் மருத்துவமனையில் இருந்ததால், என்னைப் போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு இருந்தார்கள். அதில் சிலரின் இறப்புகளை பார்க்கும் போது அடுத்து நானாகத்தான் இருக்கும் என்று தோன்றும். சோதனை காலத்தில் ஏதாவது ஒரு அதிசயம் நடக்காதான்னு என் மனசும் அப்போது ஏங்கியது.

சுழற்சி முறையில் கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டது. அந்த சிகிச்சைக்கு உரிதான முடி உதிர்தல், ரத்த வாந்தி போன்ற பக்கவிளைவுகளையும் சந்தித்தேன். இதனால் மன ரீதியாக மட்டும் இல்லாமல் உடல் ரீதியாகவும் தளர ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் கடவுள் மட்டுமே ஒரே வழின்னு அவர் மேல் என் முழு பாரத்தையும் போட்டேன். நான் கஷ்டப்படுவதைப் பார்த்த என் குடும்பத்தினர் பொறுக்க முடியாமல், என்னை சீக்கிரம் கடவுள் இறைவனடி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள். காரணம், அப்படிப்பட்ட வலியினை நான் சந்தித்து வந்தேன். அதைப் பார்த்து அவர்களும் நான் பிழைத்துக் கொள்வேன் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

டாக்டர்களும் கைவிரித்தனர். ஆறு மாதம் கழித்து வரச்சொன்னார்கள். ஆனால் இரண்டு மாதங்களில் நான் கர்ப்பம் தரித்தேன். டாக்டரை சந்தித்த போது, அவர் என்னை திட்டித்தீர்த்தார். இப்படி ஒரு இக்கட்டான சூழலில் கர்ப்பம் தரித்திருப்பது உயிருக்கே ஆபத்து என்று தெரியாதான்னு கேட்டார். இருந்தாலும் குழந்தைக்காக பரிசோதனையும் மேற்ெகாண்டேன். அந்தப் பிஞ்சின் இதயத் துடிப்பினை கேட்ட போது எனக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தது. ஆனால் எனக்கு இருக்கும் பிரச்னை காரணமாக குழந்தைமுழுமையான வளர்ச்சியுடன் பிறக்குமா என்ற நம்பிக்கை மருத்துவர்களுக்கு இல்லை. வீட்டிலோ கர்ப்பத்தை கலைக்க சொன்னார்கள். ஆனால் எனக்கு எதற்குமே மனமில்லை. எது நடந்தாலும் நடக்கட்டும் என்ற நிலைக்கு சென்றுவிட்டேன்.

எட்டு மாதத்தில் பனிக்குடம் உடைய, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். குழந்தை குறைபாட்டுடன் பிறக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் 3.45 கிலோவில் முழுமையாக வளர்ச்சிப் பெற்றிருந்த ஆண் குழந்தையை என்னிடம் கொண்டு வந்து மருத்துவர்கள் காட்ட உலகின் மிக உன்னதமான நேரமாக அது இருந்தது. அதற்கடுத்த ஒரு வருடத்தில் இன்னொரு குழந்தையும் பிறந்தது.

குழந்தைகள் பிறந்த பின்பு புற்றுநோய்க்கான எவ்வித பாதிப்புகளும் எனக்கு ஏற்படவில்லை. இருந்தாலும் வாழ்வு அத்தனை எளிதானதாக இல்லை. கேன்சரை எதிர்கொள்வதற்கான மன தைரியம் மற்றும் வைராக்கியத்தை நான் பல புறக்கணிப்புக்கு நடுவே மீட்டெடுத்தேன். அதுதான் இன்றும் என் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறது’’ என்றார் நான்சி.

தொகுப்பு: ஜெனி

The post புற்றுநோயுடன் போராடி வென்ற புன்னகை அரசி appeared first on Dinakaran.

Tags : Queen ,kumkum dothi ,
× RELATED விருந்து விமர்சனம்