×
Saravana Stores

புதுவையில் கலைஞருக்கு சிலை, மணிமண்டபம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுவையில் கலைஞருக்கு சிலை, மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் அனிபால் கென்னடி, கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞருக்கு சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க அரசு முன்வருமா, அதற்கான குழு அமைக்கப்படுமா?, ஏற்கனவே அரசு வாக்குறுதி அளித்ததை அறியுமா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி கூறுகையில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞருக்கு சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க அரசுக்கு எண்ணம் உள்ளது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அனிபால் கென்னடி, இப்பணியை காலம் கடத்தாமல் உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.

இதைதொடர்ந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், செந்தில்குமார், நேரு(சுயே) ஆகியோர் தனி நபர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். இதை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் பேசினர். அதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு நிச்சயமாக மாநில அந்தஸ்து வேண்டும். அரசு சார்பில் மாநில அந்தஸ்து தர ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி, பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரை டெல்லி சென்று நேரில் சந்திப்போம். மாநில அந்தஸ்தை பெற்றே தீருவோம் என்றார். இதையடுத்து தனிநபர் தீர்மானங்கள் திரும்ப பெறப்பட்டு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்று அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

The post புதுவையில் கலைஞருக்கு சிலை, மணிமண்டபம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rangasamy ,Puducherry ,manimandapam ,Puducherry Assembly ,Anipal Kennedy ,Rangasami ,
× RELATED தீபாவளியை ஒட்டி கட்டட...